தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் முக்கியமான தொகுதியாக ஸ்ரீவைகுண்டம் உள்ளது. தாமிரபரணி கரையோரம் அமைந்துள்ளதால் இந்த தொகுதியின் பிரதான தொழில் விவசாயம்.
வி.ஐ.பி. அந்தஸ்தை பெற்ற இந்த தொகுதியில் சி.பா. ஆதித்தனார், ஏ.பி.சி. வீரபாகு போன்ற முக்கிய தலைவர்கள் வென்றுள்ளனர். இந்த தொகுதியில் இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமியர் என அனைத்து சமுதாயத்தினரும் பரவலாக உள்ளனர். நவதிருப்பதி, நவகைலாயம் போன்ற ஆன்மீக ஸ்தலங்கள் உள்ளன.
ஸ்ரீவைகுண்டம், ஏரல், சாத்தான்குளம் ஆகிய 3 தாலுகாக்களை உள்ளடக்கிய தொகுதியாகவும் உள்ளது. மறுசீரமைப்பில் சாத்தான்குளம் தொகுதி நீக்கப்பட்டதால் அந்த தொகுதியின் பெரும்பாலான பகுதிகள் ஸ்ரீவைகுண்டம் தொகுதியுடன் இணைக்கப்பட்டன. சாத்தான்குளம் தாலுகா முழுவதும், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் தாலுகாக்களில் பகுதியளவு இந்த தொகுதியில் உள்ளன. சாயர்புரம், ஸ்ரீவைகுண்டம், பெருங்குளம், ஏரல், ஆழ்வார்திருநகரி போன்ற பேரூராட்சிகள் இந்த தொகுதியில் அடங்கி உள்ளன.
இந்த தொகுதி 1957-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 2009 இடைத்தேர்தலையும் சேர்த்து இதுவரை 15 தேர்தல்களை சந்தித்துள்ளது. இதில் 7 முறை காங்கிரஸ் வென்றுள்ளது. இதில் 1957, 1962 தேர்தல்களில் காங்கிரஸ் சார்பில் ஏ.பி.சி. வீரபாகு வென்றுள்ளார். தி.மு.க. 3 முறையும் வென்றுள்ளது. 1967, 1971 தேர்தல்களில் தி.மு.க. சார்பில் சி.பா. ஆதித்தனார் வென்றுள்ளார். அடுத்ததாக அ.தி.மு.க. 5 முறையும் வெற்றி பெற்றுள்ளது.
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 10 ஆயிரத்து 132 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 13 ஆயிரத்து 622 பேரும், 3&ம் பாலித்தனவர்கள் 10 பேர் என மொத்தம் 2 லட்சத்து 23 ஆயிரத்து 764 வாக்காளர்கள் உள்ளனர்.
ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் நாடார்கள் 40 சதவீதமும், பிள்ளைமார்கள், பட்டியல் இனத்தவர்கள் தலா 20 சதவீதமும், அடுத்தபடியாக தேவர் இனமக்களும் உள்ளனர். இதுதவிர ஏனைய சமுதாய மக்களும் குறிப்பிட்ட அளவில் உள்ளனர்.
ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியாக இருந்த ஏரல் தனித் தாலுகாவாக தரம் உயர்த்தப்பட்டு இருப்பது அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
கோரிக்கைகள்
இந்த பகுதியில் வாழை விவசாயம் அதிகம். வாழைத்தார்களுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் வேதனைபடுகின்றனர். எனவே வாழைக்காயில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் ஆலை அமைக்க வேண்டும். குளிர்பதன கிடங்குகள் அமைக்க வேண்டும் என்பன இத்தொகுதி மக்களின் முக்கிய கோரிக்கை களாகும். ஸ்ரீவைகுண்டத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு செயல்பட்டு வந்த வார சந்தை மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கை.
நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு நீர் ஆதாரமாக விளங்கும் தாமிரபரணி ஆற்றின் கடைசி இரண்டு அணைக்கட்டுகள் ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ளன. மருதூர் அணை மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணையின் மூலம் பிரியும் 53 பாசன குளங்கள் மூலம் சுமார் 48 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
அணைகள் மற்றும் 53 பாசன குளங்கள் தூர்வாரப் படாததால் மழைக் காலங்களில் கிடைக்கும் வெள்ள நீரை உரிய முறையில் சேமித்து வைக்க முடியாமல் உள்ளது. கோடை காலங்களில் தண்ணீர் பற்றாக்குறையும், மழைக் காலங்களில் பல்லாயிரக்கணக்கான கனஅடி தண்ணீர் ஆண்டுதோறும் வீணாக கடலுக்கு செல்வதும் தொடர் கதையாகவே உள்ளது.
ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் நவத்திருப்பதி பெருமாள் கோவில்கள், நவக்கைலாய கோவில்களின் ஒன்றான கைலாசநாதர் சிவன் கோவில் என ஆன்மீக தலங்கள் உள்ளன. எனவே ஸ்ரீவைகுண்டம் அணையில் படகுகுழாம் அமைக்க வேண்டும், சுற்றுலாத் தலமாக ஸ்ரீவைகுண்டம் தொகுதி மேம்படுத்தப்பட வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகள் உள்ளது.
அதிமுக சார்பில் சண்முகநாதன் மூன்று முறை வெற்றி பெற்றுள்ளார். இதில் கடந்த 2011 மற்றும் 2016-ல் தொடர்ச்சியாக வெற்றி பெற்றார். இந்த முறையில் அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஹாட்ரிக் வெற்றியை நோக்கி களம் இறங்குகிறார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு இந்தத் தொகுதி ஒதுக்க வாய்ப்புள்ளது.
ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் இதுவரை வெற்றி பெற்றவர்கள் விவரம்...
1957 ஏ.பி.சி வீரபாகு (காங்கிரஸ்)
1962 ஏ.பி.சி. வீரபாகு (காங்கிரஸ்)
1967 சி.பா. ஆதித்தனார் (தி.மு.க.)
1971 சி.பா. ஆதித்தனார் (தி.மு.க.)
1977 சாது செல்வராஜ் (அ.தி.மு.க.)
1980 ராமசுப்பிரமணியன் (அ.தி.மு.க.)
1984 டேனியல் ராஜ் (காங்கிரஸ்)
1989 டேனியல் ராஜ் (காங்கிரஸ்)
1991 டேனியல் ராஜ் (காங்கிரஸ்)
1996 டேவிட் செல்வன் (தி.மு.க.)
2001 சண்முகநாதன் (அ.தி.மு.க.)
2006 ஊர்வசி செல்வராஜ் (காங்கிரஸ்)
2009 சுடலையாண்டி (காங்கிரஸ்)
2011 சண்முகநாதன் (அ.தி.மு.க.)
2016 சண்முகநாதன் (அ.தி.மு.க.)