ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் தொடங்குகிறது. இதையொட்டி ருதுராஜ் கெய்க்வாட் (சென்னை), ஹர்திக் பாண்ட்யா (மும்பை), ரிஷப் பண்ட் (லக்னோ). ஸ்ரேயாஸ் அய்யர் (பஞ்சாப்), ரஜத் படிதார் (பெங்களூரு), ரஹானே (கொல்கத்தா) உள்பட இந்த போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளின் கேப்டன்களும் மும்பை சென்று உற்சாகமாக கலந்துரையாடியதுடன் குரூப் போட்டோவும் எடுத்துக் கொண்டனர்.
முன்னதாக அவர்களுக்கு ஐ.பி.எல். விதிமுறைகள், பயிற்சிக்கான புதிய நடைமுறைகள் குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளும், நடுவர்களும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். அப்போது 2023-ம் ஆண்டு முதல் ஐ.பி.எல்.-ல் பயன்படுத்தப்படும் இம்பேக்ட் வீரர் விதிமுறை (தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர்கள் விதிமுறை) குறித்து பெரும்பாலான கேப்டன்கள் ஆட்சேபனை தெரிவித்தனர்.
இம்பேக்ட் விதிமுறை என்பது, இன்னிங்சின் பாதியில் ஏதாவது வீரரை எடுத்து விட்டு அவருக்கு பதிலாக மற்றொரு வீரரை ஆட வைப்பதாகும். ஆனால் இந்த விதிமுறை சர்வதேச போட்டியில் கிடையாது. அத்துடன் இது தரமான ஆல்-ரவுண்டர்கள் உருவாகுவதை தடுக்கும் வகையில் இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. அதனால் பெரும்பாலான கேப்டன்கள் இந்த விதியை நீக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் 2027-ம் ஆண்டு வரை இம்பேக்ட் வீரர் விதி தொடரும் என்பதில் மாற்றம் கிடையாது. அதன் பிறகு கேப்டன்களின் யோசனை பரிசீலிக்கப்படும் என்று கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.