கிரிக்கெட்

IPL 2026 | ஐ.பி.எல். வரலாற்றில் முதல் முறை... புதிய சாதனை படைத்த கிங் கோலி..!

குஜராத் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஐ.பி.எல். 2026 டி20 கிரிக்கெட் தொடர் விராட் கோலி ஆதிக்கம் நிறைந்ததாக இருக்கிறது. இந்தியாவில் 8,000 அல்லது அதற்கும் அதிக ரன்களை குவித்த முதல் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றிருக்கிறார். ஐ.பி.எல். தொடரில் நேற்றிரவு நடந்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டயில் விராட் கோலி இந்த சாதனையை படைத்தார்.

முன்னதாக 231 இன்னிங்ஸில் 7,998 ரன்களை குவித்திருந்த விராட் கோலி நேற்றைய போட்டியில் 13 பந்துகளில் 28 ரன்களை குவித்து அசத்தினார். இதன் மூலம் ஐ.பி.எல். தொடரில் அவர் 8,000 ரன்களை கடந்து அசத்தினார். தற்போது 232 இன்னிங்ஸ் முடிவில் விராட் கோலி 8,016 ரன்களுடன் ஐ.பி.எல். தொடர்களில் இந்தியாவில் அதிக ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

இந்தப் பட்டியலில் ரோகி சர்மா 237 இன்னிங்ஸில் 6,274 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும், ஷிகர் தவான் 187 இன்னிங்ஸில் 5,819 ரன்களுடன் மூன்றாவது இடத்திலும், டேவிட் வார்னர் 164 இன்னிங்ஸில் 5,689 ரன்களுடன் நான்காவது இடத்திலும், சுரேஷ் ரெய்னா 181 இன்னிங்ஸில் 4,958 ரன்களுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளார்.

விராட் கோலி சாதனையை தவிர்த்து நடப்பு ஐ.பி.எல். 2026 கிரிக்கெட் தொடரில் ஆர்.சி.பி. அணி முதல் முறையாக ஆல்அவுட் ஆகியுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்.சி.பி. அணி 155 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. தொடர்ந்து ஆடிய குஜராத் அணி 15.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன்களை குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.