ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் 9000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். ஐ.பி.எல். 2026 கிரிக்கெட் தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது விராட் கோலி இந்த சாதனையை படைத்தார்.
வெறும் 11 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய விராட் கோலி அக்சர் படேல் வீசிய பந்தில் ஒரு ரன் எடுக்கும் போது 9000 ரன்களை கடந்தார். ஐ.பி.எல். தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலியை தொடர்ந்து ரோகித் சர்மா 2-ஆவது இடத்தில் உள்ளார். இவர் இதுவரை 7183 ரன்களை குவித்துள்ளார்.
இவர்களுக்கு அடுத்தடுத்த இடங்களில் ஷிகர் தவான் (6769 ரன்கள்), டேவிட் வார்னர் (6565 ரன்கள்) மற்றும் கே.எல். ராகுல் (5579) ரன்களுடன் டாப் 5 பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
போட்டியை பொருத்தவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி டெல்லி கேபிட்டல்ஸ் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிட்டல்ஸ் அணி வெறும் 75 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு அணி 6.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 77 ரன்களை அடித்து வெற்றியை பதிவு செய்தது.