கிரிக்கெட்

IPL 2026 | VIDEO: சிஎஸ்கே அணியின் தொடக்க ஜோடியை அறிவித்த ருதுராஜ்

இந்த சீசனில் தான் சஞ்சு சாம்சனுடன் இணைந்து தொடக்க வீரராகக் களம் இறங்குவதை உறுதி செய்துள்ளார்.

மாலை மலர்

10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி, 10 அணி வீரர்களும், பயிற்சியை தொடங்கிவிட்டனர்.

இந்த நிலையில் வழக்கமாக ஐபிஎல் தொடருக்கு முன்னதாக 10 அணிகளின் கேப்டன்களும் ஐபிஎல் கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது வழக்கமான ஒன்று. அந்த வகையில் இந்த முறையும் 10 அணிகளின் கேப்டன்களும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மேலும் டென்னிஸ் பந்து கொண்டு அனைவரும் விளையாடி மகிழ்ந்தனர்.

அவர்களிடம் இந்த ஐபிஎல் தொடர் குறித்து சில சுவாரஸ்ய கேள்விகளும் கேட்கப்பட்டது. அந்த வகையில் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டிடம் இந்த முறை சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்கள் யார் யார் என கேள்வி எழுப்பபட்டது. அதற்கு பதில் அளித்த ருதுராஜ், இந்த சீசனில் தான் சஞ்சு சாம்சனுடன் இணைந்து தொடக்க வீரராகக் களம் இறங்குவதை உறுதி செய்துள்ளார்.

கடந்த சீசனில் 10-வது இடத்தைப் பிடித்த சிஎஸ்கே, இந்த முறை மிகப்பெரிய மாற்றத்தைச் செய்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து ரூ.18 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட சஞ்சு சாம்சன், தொடக்க வீரராக அதிரடி காட்ட உள்ளார்.

கடந்த முறை 3-வது இடத்தில் களம் இறங்கிய ருதுராஜ், இந்த சீசனில் தனது வழக்கமான தொடக்க இடத்திற்குத் திரும்புகிறார். கடந்த சீசனில் 188.97 ஸ்டிரைக் ரேட்டில் மிரட்டிய இளம் வீரர் ஆயுஷ் மத்ரே, இந்த முறை 3-வது வீரராக களம் காண்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிஎஸ்கே அணி தனது முதல் போட்டியில் மார்ச் 30-ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது குறிப்பிடத்தக்கது.