ஐ.பி.எல். 2026 டி20 கிரிக்கெட் தொடரில் நேற்றைய போட்டியிலும் பஞ்சாப் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியது. தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வியுற்ற நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை இழந்தது.
ஐ.பிஎ.ல். தொடரின் 49-வது போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசியது. பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணிக்கு நல்ல துவக்கம் கிடைத்தது. அந்த அணியின் அபிஷேக் சர்மா 13 பந்துகளில் 38 ரன்ளையும், டிராவிஸ் ஹெட் 19 பந்துகளில் 38 ரன்களையும் அடித்தார்.
அடுத்து களமிறங்கிய இஷான் கிஷன் 32 பந்துகளில் 55 ரன்களை குவித்தார். ஹென்ரிட்ச் கிளாசன் 43 பந்துகளில் 69 ரன்கலையும், நிதிஷ் குமார் ரெட்டி 13 பந்துகளில் 29 ரன்களை அடித்தனர். இதனால் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பு 235 ரன்களை குவித்தது.
கடின இலக்கை துரத்திய பஞ்சாப் அணி தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்தது. ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த போதிலும், மறுபக்கம் கூப்பர் கனொலி அதிரடியாக ஆடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 59 பந்துகளில் 107 ரன்களை விளாசினார். எனினும், மற்ற வீரர்கள் ரன் குவிக்க தவறிய நிலையில், பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 202 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் ஐதராபாத் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியிலும் தோல்வியை தழுவிய நிலையில், ஐ.பி.எல். 2026 தொடரின் புள்ளிகள் பட்டியலில் பஞ்சாப் அணி முதலிடத்தை இழந்து இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.