கிரிக்கெட்

IPL 2026 | மும்பையை மிரட்டி விட்ட சன்ரைசர்ஸ் ஐதராபாத்... இமாலய இலக்கை சுலபமாக துரத்தி அபார வெற்றி!

ஐதராபாத் அணிக்கு கிளாசன் 30 பந்துகளில் 65 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

ஐ.பி.எல். 2026 டி20 கிரிக்கெட் தொடரின் 41-ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

மும்பை அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய வில் ஜாக்ஸ் மற்றும் ரியான் ரிக்கில்டன் அபாரமான துவக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தது. வில் ஜாக்ஸ் 22 பந்துகளில் 46 ரன்களை குவித்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 22 ரன்களும், கேப்டன் ஹர்திக் பாண்டியா 15 பந்துகளில் 31 ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

ஒருபக்கம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியான் ரிக்கில்டன் 55 பந்துகளில் 123 ரன்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 243 ரன்களை குவித்தது.

244 எனும் கடின இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் ஜோடி சிறப்பான துவக்கம் கொடுத்தது. இந்த ஜோடி முறையே 45 மற்றும் 76 ரன்களை குவித்து ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய ஹென்ரிட்ச் கிளாசன் அசத்தலாக ஆடி அரைசதம் கடந்தார்.

போட்டி முடிவில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 18.4 ஓவர்களில் வெறும் 4 விக்கெட்டுகளை இழந்து 249 ரன்களை குவித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐதராபாத் தரப்பில் கிளாசன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 30 பந்துகளில் 65 ரன்களை விளாசினார்.