ஐ.பி.எல். 2026 டி20 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருபவர் சுனில் நரைன். வெஸ்ட் இண்டீஸ் வீரரான இவர் ஐ.பி.எல். தொடரில் இதுவரை எந்த சர்வதேச வீரரும் எட்டாத சாதனையை படைத்து அசத்தியுள்ளார்.
நடப்பு ஐ.பி.எல். தொடரில் நேற்று மதியம் நடந்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் போது சுனில் நரைன் இந்த சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். அதன்படி ஐ.பி.எல். தொடரில் 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை சுனில் நரைன் படைத்தார்.
இதுவரை இல்லாத அளவுக்கு முதல் சர்வதேச வீரராக சாதனை படைத்த சுனில் நரைனுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளரும், பிரபல நடிகருமான ஷாருக் கான் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், "சுனில், என் நண்பா... 15 சீசன்கள்... 200-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகள்... 3 கோப்பைகள்... மற்றும் உலகம் முழுவதும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் இன்னும் பல சாதனைகள் படைத்த உனக்கு என் வாழ்த்துகள்!!!
நீ ஒரு மந்திரவாதி; எங்கள் சொந்த குடும்பத்தை சேர்ந்த ஒருவரை போலவே நாங்கள் உன்னை நேசிக்கிறோம். இன்றும், என்றும் உனக்கு என் அன்பு... ஆரோக்கியத்துடன் இரு; எப்போதும் புன்னகை செய்!," என குறிப்பிட்டுள்ளார்.