கிரிக்கெட்

IPL 2026 | இந்த வெற்றி பந்துவீச்சாளர்களால் தான் சாத்தியமானது - ஆர்.சி.பி. கேப்டன் புகழாரம்

சுயேஷ் ஸ்டம்புகளுக்கு நேராக வீசிய பந்துவீச்சு பார்ப்பதற்குப் பிரமாதமாக இருந்தது.

ஐ.பி.எல். 2026 கிரிக்கெட் தொடரில் நேற்று (ஏப்ரல் 15) நடந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி எளிதான வெற்றியை பதிவு செய்தது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 146 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இதைத் தொடர்ந்து ஆடிய பெங்களூரு அணி 15.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 149 ரன்களை அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டிக்கு பிறகு வெற்றி குறித்து பேசிய ஆர்.சி.பி. அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் பந்துவீச்சாளர்களை புகழ்ந்து தள்ளினார்.

இதுகுறித்து பேசிய அவர், "பந்துவீச்சு மிகச் சிறப்பாக இருந்தது. இதில் ஒரு நல்ல விஷயம், நாம் டாஸ் வென்றது தான் என்று கருதுகிறேன். மேலும், வேகப்பந்து வீச்சாளர்கள் பந்தை ஆடுகளத்தில் இறக்கிய விதம் பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருந்தது. அவர் (Krunal Pandya) அடுத்து என்ன வகையான பந்தை வீசப்போகிறார் என்பது எனக்குத் தெரியாது; இருப்பினும், அவர் மிகவும் துணிச்சலான ஒரு பந்துவீச்சாளர் என்றே நான் கூறுவேன். அதே வேளையில், சுயேஷ் ஸ்டம்புகளுக்கு நேராக வீசிய பந்துவீச்சு பார்ப்பதற்குப் பிரமாதமாக இருந்தது.

ஒரு கேப்டனுக்கு, டி20 தொடர்களில் நிபுணத்துவம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இருந்தால், அது வேலையை எளிதாக்குகிறது. ஏனென்றால், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று அவர்களிடம் சொல்ல வேண்டியதில்லை. அந்த அனுபவமும் யோசனைகளும் மற்ற எல்லா பந்துவீச்சாளர்களுக்கும் உதவுகின்றன. இப்போதைக்கு, நாங்கள் ஒவ்வொரு போட்டியாகத்தான் பார்க்கிறோம்," என்றார்.