கிரிக்கெட்

விராட் கோலி அதிரடி... 2-ஆவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது RCB!

இறுதிப் போட்டியில் விராட் கோலி அரைசதம் அடித்து அசத்தல்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல். 2026 டி20 தொடரின் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பரபரப்பான இறுதிப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அபார வெற்றி பெற்று கோப்பையை தன்வசப்படுத்தியது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சு சேர்வு செய்தது. இதனால் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் துவக்க வீரர்களும், நடப்பு சீசனில் தொடர்ச்சியாக அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சாய் சுதர்சன் மற்றும் கேப்டன் சுப்மன் கில் ஜோடி முறையே 12 மற்றும் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினர்.

இவர்களை தொடர்ந்து களமிறங்கிய நிஷாந்த் சிந்து 20 ரன்களிலும் ஜோஸ் பட்லர் 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கியவர்களில் வாஷிங்டன் சுந்தர் மட்டும் அசத்தலாக ஆடி ரன்குவிப்பில் கவனம் செலுத்தினார். இவர் தன் பங்கிற்கு 37 பந்துகளில் 50 ரன்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்கமால் களத்தில் இருந்தார். இதனால், குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 155 ரன்களை சேர்த்தது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ரசிக் சலாம் 3 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் தலா 2 விக்கெட்டுகளையும் க்ரூணல் பாண்டியா 1 விக்கெட் வீழ்த்தினார்.

156 எனும் எளிய இலக்கை துரத்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு வெங்கடேஷ் அய்யர் மற்றும் விராட் கோலி ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. வெங்கடேஷ் அய்யர் 16 பந்துகளில் 32 ரன்களை விளாசிய நிலையில் அவுட் ஆகி வெளியேறினார். இவரை தொடர்ந்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல், க்ரூணல் பாண்டியா தலா 1 ரன்னுக்கும், கேப்டன் பட்டிதார் 15 ரன்களுக்கும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த போதிலும், மறுப்பக்கம் விராட் கோலி தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார். போட்டி முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 161 ரன்களை குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விராட் கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 42 பந்துகளில் 75 ரன்களை குவித்தார்.

இதன் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐ.பி.எல். 2026 கோப்பையை வென்றது. கடந்த ஆண்டும் ஐ.பி.எல். கோப்பையை பெங்களூரு அணி வென்ற நிலையில், தற்போது இந்த ஆண்டும் கோப்பையை வென்று தொடர்ச்சியாக இரண்டு முறை கோப்பையை வென்று பெங்களூரு அணி அசத்தியுள்ளது.