ஐ.பி.எல். 2026 டி20 கிரிக்கெட் தொடரின் 54-ஆவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
அதன்படி பேட்டிங் தொடங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் துவக்க வீரரான ரியான் ரிக்கிள்டன் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். இவருடன் களமிறங்கிய மற்றொரு துவக்க வீரரான ரோகித் சர்மா 10 பந்துகளில் 22 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இவருடன் ஆடிய நமன் திர் 32 பந்துகளில் 47 ரன்களை குவித்தார்.
இவர்கள் தவிர திலக் வர்மா மட்டும் சிறப்பாக ஆடி 42 பந்துகளில் 57 ரன்களை குவித்தார். இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன்களை சேர்த்தது.பெங்களூரு சார்பில் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகளையும், ஹேசில்வுட், ரசிக் சலாம் மற்றும் ரொமரியோ ஷெப்பரு தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.
எளிய இலக்கை துரத்திய பெங்களூரு அணிக்கு துவக்கத்திலேயே விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி ஷாக் கொடுத்தார். இவருடன் துவக்க வீரராக களமிறங்கிய ஜேக்கப் 27 பந்துகளில் 26 ரன்களை சேர்த்தார். அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
எனினும், க்ரூணால் பாண்டியா சிறப்பாக 46 பந்துகளில் 73 ரன்களை குவித்து தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில், கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை உருவானது. கடைசி பந்தை எதிர்கொண்ட ரசிக் சலாம் 2 ரன்களை ஓடி எடுத்த நிலையில், பெங்களூரு அணி 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்களை துரத்தி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.