கிரிக்கெட்

IPL 2026 | லக்னோ அணியை முடித்துவிட்ட ஆர்.சி.பி... 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

விராட் கோலி சிறப்பாக ஆடி 49 ரன்களை குவித்தார்.

ஐ.பி.எல். 2026 கிரிக்கெட் தொடரின் 23-ஆவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆர்.சி.பி. அணி முதலில் பந்துவீசியது.

இதைத் தொடர்ந்து பேட்டிங் ஆடிய லக்னோ அணிக்கு சுமாரான துவக்கமே கிடைத்தது. அந்த அணியின் துவக்க வீரர்களில் ஒருவரான ஏய்டன் மார்க்ரம் 12 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் நிகோலஸ் பூரன் தலா 1 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். அடுத்து களமிறங்கியவர்களில் ஆயுஷ் பதோனி மற்றும் முகுல் சவுத்ரி பொறுப்பாக ஆடி ரன் சேர்த்தனர்.

இருவரும் முறையே 38 மற்றும் 39 ரன்களை சேர்த்தனர். முன்னதாக தொடக்க வீரராக களமிறங்கிய மிட்செல் மார்ஷ் 32 பந்துகளில் 40 ரன்களை குவித்தார். இதன் மூலம் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 146 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஆர்.சி.பி. தரப்பில் ரசிக் சலாம் 4 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளையும், க்ரூனால் பாண்டியா 2 விக்கெட்டுகளையும், ஹேசில்வுட் 1 விக்கெட் கைப்பற்றினர்.

இதைத் தொடர்ந்து 147 ரன்களை துரத்திய ஆர்.சி.பி. அணிக்கு பில் சால்ட் 7 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். மற்றொரு துவக்க வீரரான விராட் கோலி சிறப்பாக ஆடி 34 பந்துகளில் 49 ரன்களை குவித்தார். இவர் தவிர கேப்டன் ரஜத் பட்டிதார் 27 ரன்கள், ஜிதேஷ் சர்மா 23 ரன்களை சேர்த்தனர்.

போட்டி முடிவில் ஆர்.சி.பி. அணி 5 விக்கெட் இழப்புக்கு 149 ரன்களை குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆர்.சி.பி. தரப்பில் டிம் டேவிட் மற்றும் ரெமாரியோ ஷெப்பர்ட் தலா 14 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். லக்னோ தரப்பில் ப்ரின்ஸ் யாதவ் 3 விக்கெட்டுகளையும், ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.