ஐ.பி.எல். 2026 டி20 கிரிக்கெட் தொடரில் இன்றிரவு (ஏப்ரல் 27) நடந்த போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டெல்லியில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
அதன்படி பேட்டிங்கை தொடங்கிய டெல்லி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் துவக்க வீரர் சஹில் பராக் ரன் ஏதும் எடுக்காமலும், மற்றொரு துவக்க வீரரான கே.எல். ராகுல் 1 ரன்னுக்கும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
அடுத்தடுத்து வந்த வீரர்களும் இதே போல் வந்த வேகத்தில் விக்கெட்டை பறிக்கொடுக்க டெல்லி அணி மிக குறைந்த ரன்களில் ஆட்டமிழக்கும் சூழல் உருவானது.
எனினும், அபிஷேக் பொரெல் நிதானமாக ஆடி 30 ரன்களும், இவருடன் ஆடிய டேவிட் மில்லர் மற்றும் கைல் ஜேமிசன் முறையே 19 மற்றும் 12 ரன்களை சேர்க்க டெல்லி கேபிட்டல்ஸ் அணி 16.3 ஓவர்களில் வெறும் 75 ரன்களை மட்டுமே சேர்த்து ஆல்-அவுட் ஆனது.
பெங்களூரு தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஹேசில்வுட் 4 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளையும், ரசிக் சலாம், சுயாஷ் சர்மா மற்றும் க்ரூணல் பாண்டியா தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.
எளிய இலக்கை துரத்திய பெங்களூரு அணிக்கு ஜேகப் பெத்தேல் 11 பந்துகளில் 20 ரன்களையும், விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் முறையே 23 மற்றும் 34 ரன்களையும் குவித்தனர். பெங்களூரு அணி 6.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 77 ரன்களை குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.