கிரிக்கெட்

IPL 2026 | குஜராத் அணியை பந்தாடிய பஞ்சாப் கிங்ஸ்... 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

பஞ்சாப் அணியின் கூப்பர் அரைசதம் விளாசி அசத்தினார்.

2026 ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த 28-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற 4-வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பந்துவீச்சு தேர்வு செய்தார்.

இதைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 162 ரன்களை சேர்த்தது. குஜராத் சார்பில் கேப்டன் சுப்மன் கில் அதிகபட்சமாக 39 ரன்கள் (6 பவுண்டரிகள்), ஜாஸ் பட்லர் 38 ரன்கள் (3 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்), கிளென் பிலிப்ஸ் 25 ரன்கள் (1 பவுண்டரி, 1 சிக்சர்), வாஷிங்டன் சுந்தர் மற்றும் சாய் சுதர்சன் முறையே 18 மற்றும் 13 ரன்கள் சேர்த்தனர்.

பஞ்சாப் கிங்ஸ் சார்பில் விஜய் குமார் வைஷாக் 3 விக்கெட்டுகளையும், யுஸ்வேந்திர சாஹல் 2 விக்கெட்டுகளையும், மார்கோ யான்சென் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து 163 ரன்களை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் ப்ரியான்ஷ் ஆர்யா 7 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.

இவருடன் களமிறங்கிய பிரப்சிம்ரன் சிங் 24 பந்துகளில் 37 ரன்கள் (1 பவுண்டரி, 4 சிக்சர்கள்) விளாசினார். அடுத்து களமிறங்கிய கூப்பர் கானோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எனினும், அடுத்தடுத்து களமிறங்கிய கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 18 ரன்களிலும், நேஹல் வதெரா 3 ரன்களிலும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த போதிலும், கூப்பர் கானொலி சிறப்பாக ஆடி 44 பந்துகளில் 72 ரன்களை குவித்தார். இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 19.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 165 ரன்களை அடித்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.