ஐ.பி.எல். 2026 தொடரில் நேற்றிரவு நடந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்ட பஞ்சாப் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 163 ரன்களை குவித்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 19.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன்களை குவித்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்த நிலையில், போட்டிக்கு பிறகு பேசிய கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர், இப்போதும் நாங்கள் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறோம், அதில் இருந்து நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்கிறோம், என்று கூறினார்.
இதுகுறித்து பேசிய அவர், "தனிப்பட்ட முறையில் அது சிறப்பான ஸ்கோர் என்றே நான் நினைத்தேன். புதிய பந்து ஆரம்பத்தில் ஓரளவு வேலை செய்தது. அவர்களது (எதிரணி) பந்துவீச்சாளர்கள் பிட்ச்-ஐ சரியாக பயன்படுத்தினர். நாங்கள் பவர்பிளேவின் போதே 4 விக்கெட்டுகளை இழந்தவிட்டோம்.
அங்கிருந்து 160 ரன்களை சேர்த்தது மிகவும் அபாரமான முயற்சி. புதிய பந்து கொண்டு சரியான லைன் மற்றும் லென்த்-இல் பந்துவீசி விக்கெட் எடுக்க முடியும் என்று நினைத்தேன், ஆனால் அது வேலை செய்யாமல் போனது.
முயற்சி மற்றும் அணுகுமுறைக்கு பாராட்டுக்கள். கடுமையான லென்த்களில் பந்துவீச தவறிவிட்டோம் என நினைக்கிறேன். இந்த களத்தில் மிட்விக்கெட் மீது அடிப்பது மிக கடுமையாக இருந்தது. திட்டங்களை செயல்படுத்தியதில், நீங்கள் தவறு செய்துவிட்டோம். இப்போதும் நாங்கள் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறோம், அதில் இருந்து நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்கிறோம்.
பந்துவீச்சாளர்களின் எண்ணம் வெற்றி பெற்றாக வேண்டும் என்றே இருந்தது, ஆனால் இன்று அது சரியாக அமையவில்லை. அடுத்த வாய்ப்புக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். வீரர்கள் கடுமையாக உழைத்து வருகிறார்கள். குணம் சிறப்பாகவும், மனப்பான்மை சரியாகவும் இருந்தால், இறுதியில் வெற்றி நிச்சயம் கைகூடும்," என்று தெரிவித்தார்.