ஐ.பி.எல். 2026 கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு (ஏப்ரல் 12) நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகள் மோதின. பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கிய நிலையில், இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த பெங்களூரு அணிக்கு விராட் கோலி சற்றே நிதானமாக ஆடி அரைசதம் கடந்தார். எனினும், ஃபில் சால்ட் மற்றும் ரஜத் பட்டிதர் வழக்கம் போல அதிரடி ஆட்டம் ஆடி ரன்குவிப்பில் ஈடுபட்டனர்.
இந்தப் போட்டியில் விக்கெட் கொடுக்காமல் அரைசதம் கடந்த நிலையில், விரட் கோலி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். அந்த வகையில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 1000-க்கும் அதிக ரன்களை குவித்த முதல் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். இந்த வரிசையில் கே.எல். ராகுல் (977) மற்றும் ஷிகர் தவான் (901) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
இதுதவிர டி20 கிரிக்கெட்டில் அதிக முறை சதம் கடந்த பார்ட்னர்ஷிப்களை கொண்ட வீரர்களில் விராட் கோலி தற்போது கரிஸ் கெயில் மற்றும் பாபர் அசாம் ஆகியோரின் சாதனையை முறியடித்துள்ளார். ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெஙகளூரு அணியின் இரண்டாவது சிறந்த ஓபனிங் பார்ட்னர்ஷிப்பாக இந்த இன்னிங்ஸ் மாறியது.