கிரிக்கெட்

IPL 2026 | ஐதராபாத் அணியின் அதிரடியை சமாளிக்குமா மும்பை? இன்று மோதல்

மும்பை அணி இதுவரை 20 வீரர்களை பயன்படுத்தி பார்த்தும் ஒரு அணியாக ஒருங்கிணைந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கிறது.

10 அணிகள் பங்கேற்றுள்ள 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 41-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன்ரைசர்சை எதிர்கொள்கிறது.

மும்பை அணி இதுவரை 7 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி (கொல்கத்தா, குஜராத் அணிகளுக்கு எதிராக), 5 தோல்வி (டெல்லி, ராஜஸ்தான், பெங்களூரு, பஞ்சாப், சென்னை அணிகளுக்கு எதிராக) என 4 புள்ளியுடன் 9-வது இடத்தில் தத்தளிக்கிறது. இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கிய அந்த அணி அதன் பிறகு தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் உதை வாங்கியது. அடுத்து திலக் வர்மாவின் சதத்தால் குஜராத்தை வீழ்த்தியது. சொந்த மண்ணில் நடந்த சென்னைக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் 208 ரன் இலக்கை விரட்டுகையில் 104 ரன்னில் சுருண்டு 103 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

மும்பை அணி இதுவரை 20 வீரர்களை பயன்படுத்தி பார்த்தும் ஒரு அணியாக ஒருங்கிணைந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கிறது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் தடுமாற்றமே மிஞ்சுகிறது. பேட்டிங்கில் திலக் வர்மா (181 ரன்), சூர்யகுமார் யாதவ் (157), நமன் திர் (154), குயின்டான் டி காக் (132) நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர். கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவும் (97 ரன்) சொதப்புகிறார். தசைப்பிடிப்பு காரணமாக கடந்த 3 ஆட்டங்களில் ஆடாத ரோகித் சர்மா (137 ரன்) களம் திரும்புவதற்கு வாய்ப்புள்ளது. அவர் வருகை தந்தால் பேட்டிங்கை வலுப்படுத்தும். பந்து வீச்சில் கசன்பார். அஸ்வனி குமார், ஷர்துல் தாக்குர் ஓரளவு கைகொடுக்கின்றனர். ஆனால் ஜஸ்பிரித் பும்ராவின் (2 விக்கெட்) பந்து வீச்சு ஏமாற்றம் அளிக்கும் வகையிலேயே உள்ளது.

ஐதராபாத் அணி 8 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி (கொல்கத்தா, 2 முறை ராஜஸ்தான் மற்றும் சென்னை, டெல்லி அணிகளுக்கு எதிராக), 3 தோல்வி (பெங்களூரு, லக்னோ, பஞ்சாப் அணிகளுக்கு எதிராக) கண்டுள்ளது. முதல் 4 ஆட்டங்களில் 3-ல் தோல்வியை தழுவிய அந்த அணி அதன் பிறகு வரிசையாக 4 ஆட்டங்களில் வெற்றியை வசப்படுத்தி எழுச்சி பெற்றிருக்கிறது.

ஐதராபாத் அணியில் அதிரடி சூரர்களுக்கு குறைவில்லை. பேட்டிங்கில் அபிஷேக் ஷர்மா (ஒருசதம், 3 அரைசதத்துடன் 380 ரன்), ஹென்ரிச் கிளாசென் (3 அரைசதத்துடன் 349), இஷான் கிஷன் (3 அரைச தத்துடன் 312). டிராவிஸ் ஹெட் (186), நிதிஷ் குமார் ரெட்டி (172) மிரட்டுகிறார்கள். நடப்பு தொடரில் அந்த அணி 6 முறை 200 ரன்களுக்கு மேல் குவித்து பேட்டிங் பலத்தை காட்டியுள்ளது. பந்து வீச்சில் இஷான் மலிங்கா (14விக்கெட்), சகிப் ஹூசைன், பிரபுல் ஹிங்கே, ஷிவாங் குமார், கம்மின்ஸ் வலுசேர்க்கிறார்கள்.

சரிவில் இருந்து மீண்டு வெற்றிப்பாதைக்கு திரும்ப போராடும் மும்பை அணி, ஐதராபாத்துக்குக்கு எதிரான கடைசி 3 ஆட்டங்களில் வெற்றி பெற்று இருப்பதால் கூடுதல் நம்பிக்கையுடன் களம் காணும். அதேநேரத்தில் தங்களது உத்வேகத்தை தொடர ஐதராபாத் வரிந்து கட்டும். பேட்டிங்குக்கு அனுகூலமான வான்கடேயில் ஐதராபாத் அணியின் அதிரடி வேட்டைக்கு அணை போடாவிட்டால் அதன் சவாலை சமாளிப்பது கடினம் தான்.

இவ்விரு அணிகளும் இதுவரை 25 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 15-ல் மும்பையும், 10-ல் ஐதராபாத்தும் வென்று இருக்கின்றன.