ஐ.பி.எல். 2026 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவியது குறித்து மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், தோல்வியில் இருந்து மீண்டு வருவோம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
நேற்றைய போட்டிக்கு பிறகு பேசிய ஹர்திக் பாண்டியா, "பவர்பிளேயில் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழப்பது எப்போதுமே சவாலானதாக இருக்கும். அதன் பிறகு எங்களால் சமாளிக்க முடியவில்லை.
நாங்கள் இன்னும் சிறப்பாக பேட் செய்திருக்க வேண்டும். அவர்களும் இதே ஆடுகளத்தில்தான் பேட் செய்தார்கள். சஞ்சு ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார், மேலும் அவர்களின் பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து வந்து கொஞ்சம் கொஞ்சமாக ரன்களை குவித்து ஒரு நல்ல ஸ்கோரை எட்டினார்கள்.
நாங்கள் அந்த ஸ்கோரைத் துரத்திப் பிடிக்க வேண்டுமானால், ஒரு நல்ல பவர்பிளேயும், ஆட்டத்தின் உத்வேகமும் எங்களுக்கு இருந்திருக்க வேண்டும், ஆனால் அது கைகூடவில்லை. எங்கள் சொந்த மைதானத்திலேயே தோல்வியடைவது உண்மையிலேயே வேதனையளிக்கிறது.
இந்த தோல்வியால் நாங்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளோம். ஒரு அணியாக, இன்று எங்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரண்டு பிரிவுகளுமே சிறப்பாகச் செயல்படவில்லை.
இங்கிருந்து மீண்டெழுந்து, வரவிருக்கும் போட்டிகளில் இன்னும் சிறப்பாக விளையாட நாங்கள் முயற்சிப்போம். நிலைமையை மாற்றியமைக்க, நான் சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும் என்று கருதுகிறேன்," என்றார்.