கிரிக்கெட்

IPL 2026 | வெற்றிக் கணக்கை தொடங்குமா கொல்கத்தா? - குஜராத் அணியுடன் இன்று மோதல்

குஜராத் அணி தனது முதல் இரு ஆட்டங்களில் 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பிடமும், 6 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடமும் தோல்வியை தழுவியது.

10 அணிகள் இடையிலான 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் 25-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான குஜராத் டைட்டன்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மல்லுகட்டுகின்றன.

குஜராத் அணி தனது முதல் இரு ஆட்டங்களில் 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பிடமும், 6 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடமும் தோல்வியை தழுவியது. அடுத்த இரு ஆட்டங்களில் ஒரு ரன் வித்தியாசத்தில் டெல்லியையும், 7 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோவையும் சாய்த்தது. கடந்த இரு ஆட்டங்களில் கிடைத்த வெற்றியால் நம்பிக்கையோடு இருக்கும் அந்த அணி உள்ளூரில் முதல் வெற்றியை ருசிக்கும் ஆர்வத்துடன் களம் காணுகிறது.

குஜராத் அணியில் பேட்டிங்கில் ஜோஸ் பட்லர், சுப்மன் கில், சாய் சுதர்சன் நல்ல நிலையில் உள்ளனர். ராகுல் திவேதியா, கிளென் பிலிப்ஸ் ஜொலித்தால் பேட்டிங் மேலும் வலுப்பெறும். பந்து வீச்சில் பிரசித் கிருஷ்ணா, ரஷித் கான், அசோக் ஷர்மா, ககிசோ ரபடா பலம் சேர்க்கின்றனர்.

நடப்பு தொடரில் வெற்றிக் கணக்கை தொடங்காத ஒரே அணி 3 முறை சாம்பியனான கொல்கத்தா தான். மும்பை, ஐதராபாத், லக்னோ, சென்னை ஆகிய அணிகளிடம் வரிசையாக உதை வாங்கியது. பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. ஒரு சீசனில் முதல் 5 ஆட் டங்களில் ஒன்றில் கூட அந்த அணி வெற்றி பெறாதது இதுவே முதல் நிகழ்வாகும்.

கொல்கத்தா அணியில் பேட்டிங்கில் அங்கிரிஷ் ரகுவன்ஷி, கேப்டன் ரஹானே மட்டுமே நம்பிக்கை அளிக்கின்றனர். சுனில் நரின், ரமன்தீப், பின் ஆலென், ரிங்கு சிங், கேமரூன் கிரீன் சொதப்புகின்ற னர். குறிப்பாக ரூ.25.20 கோடிக்கு வாங்கப்பட்ட கேமரூன் கிரீன் 5 ஆட்டங்களில் 56 ரன்களே எடுத்து பெருத்த ஏமாற்றம் அளித்துள்ளார். பந்து வீச்சும் மெச்சும்படி இல்லை.. வைபவ் அரோரா. கார்த்திக் தியாகி ஓரளவு கைகொடுக்கின்றனர். சுனில் நரின், வருண் சக்ரவர்த்தியின் சுழல் ஜாலம் எடுபட வில்லை. அதனால் அணியில் நிச்சயம் சில மாற்றங்கள் இருக்கும். ரச்சின் ரவீந்திரா, டிம் செய்பெர்ட் ஆகியோரை சேர்ப்பது குறித்து பரிசீலிக்கிறார்கள்.

கொல்கத்தா அணியில் இடம் பெற்றிருக்கும் வேகப்பந்து வீச்சாளர் பதிரானாவுக்கு இலங்கை கிரிக் கெட் வாரியம் தடையில்லா சான்றிதழை வழங்கி விட்டாலும் நடைமுறை சிக்கல் காரணமாக இந்த ஆட்டத்தில் ஆடுவதற்கு வாய்ப்பில்லை.

மொத்தத்தில் உத்வேகத்தை தொடர குஜராத் அணி முழுபலத்தையும் வெளிப்படுத்த முயற்சிக்கும். அதேநேரத்தில் தனது வியூகங்களை மாற்றி முதல் வெற்றிக்காக கொல்கத்தா கடுமையாக போராடும். எனவே ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

இவ்விரு அணிகளும் இதுவரை 4 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் குஜராத் 3 ஆட் டத்திலும், கொல்கத்தா ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன.