ஐ.பி.எல். 2026 டி20 கிரிக்கெட் தொடரின் 46-ஆவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்டர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினர். போட்டியில் முதலாவது பவர் பிளே முடிவில் அந்த அணி வெறும் 35 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பிறகு 8.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 47 ரன்களை எடுத்திருந்தது.
பிறகு மார்கஸ் ஸ்டொய்னிஸ் மற்றும் சூர்யான்ஷ் ஷெட்கெ நிதானமாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இதனால் பஞ்சாப் அணி ஸ்கோர் மெல்ல அதிகரித்தது. போட்டி முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ரன்களை சேர்த்தது. குஜராத் சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஜேசன் ஹோல்டர் 4 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் மற்றும் ரபாடா தலா 2 விக்கெட்டுகளையும், ரஷித் கான் 1 விக்கெட் வீழ்த்தினர்.
போட்டியின் 2-ஆவது இன்னிங்ஸில் 164 ரன்களை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சாய் சுதர்சன் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார். இவர் 41 பந்துகளில் 57 ரன்களை சேர்த்த போது தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார்.
அடுத்து வந்தவர்களில் ஜாஸ் பட்லர் 25 ரன்களை அடித்தார். போட்டி முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 19.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன்களை குவித்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் விஜய்குமார் வைஷாக் மற்றும் அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளையும், மார்கோ யான்சென் மற்றும் மார்கஸ் ஸ்டொய்னிஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.