கிரிக்கெட்

IPL 2026 | ரபாடா, சுப்மன் கில் அபாரம்... கொல்கத்தாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் வெற்றி

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டன் சுப்மன் கில் சிறப்பாக ஆடி அரைசதம் கடந்தார்.

ஐ.பி.எல். 2026 கிரிக்கெட் தொடரின் 25-ஆவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. அகமதாபாத்தில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

கொல்கத்தா அணிக்கு துவக்க வீரராக களமிறங்கிய டிம் செய்ஃபர்ட்19 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், மற்றொரு தொடக்க வீரரான அஜிங்கியா ரஹானே ரன் ஏதும் எடுக்காமல் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். தொடர்ந்து களமிறங்கிய அங்ரிஷ் ரகுவன்ஷி 8 ரன்களில் அவுட் ஆக, அடுத்து வந்த கேமரூன் கிரீன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இவர் தவிர ரோவ்மேன் பொவெல் 27 ரன்களும், ரமன்தீப் சிங் 17 ரன்களும் அடிக்க 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 180 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கொல்கத்தா அணிக்கு கேமரூன் கிரீன் அதிகபட்சமாக 79 ரன்களை விளாசினார். குஜராத் சார்பில் ரபாடா 3 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் மற்றும் அஷோக் சர்மா தலா 2 விக்கெட்டுகளையும், பிரசித் கிருஷ்ணா மற்றும் ரஷித் கான் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

181 ரன்களை துரத்திய குஜராத் டைட்டனஸ் அணிக்கு சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். சாய் சுதர்சன் 16 பந்துகளில் 22 ரன்களை அடித்து அவுட் ஆனார். தொடர்ந்து களமிறங்கிய ஜாஸ் பட்லர் 15 பந்துகளில் 25 ரன்களை சேர்த்து தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். வாஷிங்டன் சுந்தர் 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.

கேப்டன் சுப்மன் கில் 86 ரன்களில் ஆட்டமிழந்தார். போட்டி முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 181 ரன்களை குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா சார்பில் வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்டுகளையும், சுனில் நரைன், வைபவ் அரோரா மற்றும் ரமன்தீப் சிங் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.