கிரிக்கெட்

IPL 2026 | சி.எஸ்.கே.வின் பிளேஆஃப் கனவை முடித்துவிட்ட குஜராத் டைட்டன்ஸ்

சென்னை அணிக்கு ஷிவம் தூபே 17 பந்துகளில் 47 ரன்களை குவித்தார்.

ஐ.பி.எல். 2026 டி20 கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேறியது சென்னை சூப்பர் கிங்ஸ். இன்று நடைபெற்ற 66-ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 229 ரன்களை விளாசியது. குஜராத் சார்பில் சிறப்பாக ஆடிய சாய் சுதர்சன் 53 பந்துகளில் 84 ரன்களும், கேப்டன் சுப்மன் கில் 37 பந்துகளில் 64 ரன்களும், ஜாஸ் பட்லர் 27 பந்துகளில் 57 ரன்களை குவித்தனர்.

இதைத் தொடர்ந்து கடின இலக்கை துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு துவக்கத்திலேய அதிர்ச்சி காத்திருந்தது. சி.எஸ்.கே. அணியின் துவக்க வீரரான சஞ்சு சாம்சன் முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். தொடர்ந்து ஆடிய மேத்யூ ஷார்ட் 14 பந்துகளில் 24 ரன்களும், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 7 பந்துகளில் 16 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

உர்வில் படேல் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க கார்திக் ஷர்மா (19), டெவால்டு பிரெவிஸ் (8) சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ஷிவம் தூபே 17 பந்துகளில் 47 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார், இவருடன் ஆடிய அன்ஷூல் கம்போஜ் 8 பந்துகளில் 19 ரன்களை சேர்த்தார்.

மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13.4 ஓவர்களில் 140 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால், குஜராத் டைட்டன்ஸ் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குஜராத் சார்பில் சிறப்பாக பந்துவீசிய முகமது சிராஜ், ககிசோ ரபாடா மற்றும் ரஷித் கான் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.