கிரிக்கெட்

டெல்லி அணி 'ஹாட்ரிக்' வெற்றி பெறுமா? - குஜராத்துடன் இன்று மோதல்

டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெறும் 14-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்சை எதிர்கொள்கிறது.

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள அணியுடன் ஒரு முறை, எதிர்பிரிவில் அங்கம் வகிக்கும் அணியுடன் 2 முறை என மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.

இந்த தொடரில் இன்று (புதன்கிழமை) டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெறும் 14-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்சை எதிர்கொள்கிறது.

டெல்லி அணி தனது முதலாவது ஆட்டத்தில் 6 விக்கெட் வித் தியாசத்தில் லக்னோவை தோற்கடித்தது. அந்த ஆட்டத்தில் 141 ரன்னில் எதிரணியை சுருட்டிய டெல்லி 17.1 ஓவர்களில் இலக்கை எட்டிப்பிடித்தது. உள்ளூரில் நடந்த அடுத்த ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது.

டெல்லி அணியில் பேட்டிங்கில் 22 வயது சமீர் ரிஸ்வி சூப்பர் பார்மில் இருக்கிறார். அவர் இரு ஆட்டங்களிலும் அரைசதம் விளாசி ஆட்டநாயகனாக ஜொலித்தார். பதும் நிசாங்கா, டிரிஸ் டான் ஸ்டப்ஸ், டேவிட் மில்லரும் நம்பிக்கை அளிக்கிறார்கள். ஆனால் லோகேஷ் ராகுல், நிதிஷ் ராணா சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இருவரும் தங்களது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். பந்து வீச்சில் லுங்கி இங்கிடி, டி.நடராஜன், அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், முகேஷ்குமார் என தரமான பவுலர்களுக்கு குறைவில்லை.

இதற்கிடையே, தோள்பட்டை மற்றும் முழங்கை காயத்தில் இருந்து மீண்டு வருவதற்காக பயிற்சிகளை சொந்த ஊரில் மேற்கொண்டு வரும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட் செல் ஸ்டார்க், டெல்லி அணியுடன் இணைவதில் மேலும் கால தாமதம் ஏற்படும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. 20-ந் தேதிக்கு பிறகு தான் அவர் அணியினருடன் சேருவார் என்று தெரிகிறது. அவர் இல்லாவிட்டாலும் டெல்லி அணி பந்து வீச்சு வலுவாகவே காணப்படுகிறது.

குஜராத் அணி தொடக்க ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பிடம் பணிந்தது. 162 ரன்னில் கட்டுப்படுத்தப்பட்ட அந்த ஆட்டத்தில் கேப்டன் சுப்மன் கில், ஜோஸ் பட்லர் தவிர மற்றவர்கள் தாக்குப்பிடிக்கவில்லை. அடுத்த ஆட்டத்தில் 6 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடம் வீழ்ந்தது. 211 ரன் இலக்கை நோக்கி ஆடிய அந்த ஆட்டத்தில் கடைசி ஓவரில் 11 ரன் எடுக்க முடியாமல் தோல்வியை தழுவியது. சாய் சுதர்சன் (73 ரன்) நல்ல தொடக்கம் கொடுத்தாலும் அதனை அடுத்து வந்த வீரர்கள் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. கிளென் பிலிப்ஸ், வாஷிங்டன் சுந்தர், ராகுல் திவேதியா ஆகியோர் மிடில் வரிசையில் கைகொடுக்க வேண்டும்.

கடந்த ஆட்டத்தில் தசைப்பிடிப்பு காரணமாக ஆடாத கேப்டன் சுப்மன் கில் இன்றைய ஆட்டத்திற்கு திரும்புகிறார். இதனை சக வீரர் சாய் சுதர்சன் உறுதி செய்தார். பந்து வீச்சில் பிரசித் கிருஷ்ணா, ககிசோ ரபடா, அசோக் ஷர்மா, ரஷித் கான் போன்ற முன்னணி பவுலர்கள் இருந்தாலும், அதில் ஏற்றம் காண வேண்டியது அவசியமாகும்.

மொத்தத்தில் டெல்லி அணி 'ஹாட்ரிக்' வெற்றியை குறிவைத்து களம் காணும். அதேநேரத்தில் தோல்வியில் இருந்து மீண்டு வெற்றிக் கணக்கை தொடங்க குஜராத் அணி எல்லா வகையிலும் போராடும். எனவே இந்த ஆட்டத்தில் சுவாரசியத்துக்கு குறைவு இருக்காது.

இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் குஜராத் 4 ஆட்டத்திலும், டெல்லி 3 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. டெல்லியில் இன்று மழை பெய்வதற்கு 55 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.