கிரிக்கெட்

IPL 2026 | பஞ்சாப் அணியின் வீறுநடை தொடருமா? - டெல்லியுடன் இன்று மோதல்

நடப்பு தொடரில் தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக பஞ்சாப் திகழ்கிறது.

10 அணிகள் பங்கேற்றுள்ள 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த கிரிக்கெட் திருவிழாவில் இன்று சனிக்கிழமை இரண்டு லீக் ஆட்டங்கள் அரங்கேறுகின்றன.

இதில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் 35-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

நடப்பு தொடரில் தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக பஞ்சாப் திகழ்கிறது. அந்த அணி குஜராத், சென்னை, ஐதராபாத், மும்பை, லக்னோ அணிகளை பதம் பார்த்தது. கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

பஞ்சாப் அணியில் பேட்டிங்கில் டாப் வீரர்களான பிரியான்ஷ் ஆர்யா (211 ரன்). பிரப்சிம்ரன் சிங் (211), கூப்பர் கனோலி (223), கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (208) பட் டையை கிளப்புகிறார்கள். இதே போல் பந்து வீச்சில் விஜய்குமார் வைஷாக், அர்ஷ்தீப் சிங், மார்கோ யான்சென். யுஸ்வேந்திர சாஹல், சேவியர் பார்லெட் பயனுள்ள பங்க ளிப்பை அளிக்கின்றனர்.

டெல்லி அணி முதல் இரு ஆட்டங்களில் லக்னோ, மும்பையை தோற்கடித்தது. அடுத்த இரண்டு ஆட்டங்களில் குஜராத், சென்னையிடம் வீழ்ந்தது. அதன் பிறகு நடப்பு சாம்பியன் பெங்களூருவுக்கு அதிர்ச்சி அளித்தது. முந்தைய ஆட்டத்தில் ஐதராபாத்திடம் அடங்கியது.

டெல்லி அணியில் பேட்டிங்கில் சமீர் ரிஸ்வி (209 ரன்), லோகேஷ் ராகுல் (205), டிரிஸ்டான் ஸ்டப்ஸ், பதும் நிசாங்கா நல்ல நிலையில் உள்ளனர். கடந்த ஆட்டத்தில் நிதில் ராணா அரைசதம் விளாசி பார்முக்கு திரும்பி இருக்கிறார். டேவிட் மில்லர், அக்ஷர் பட்டேல் ஆட்டம் இன்னும் எடுபடவில்லை. பந்து வீச்சில் லுங்கி இங்கிடி, அக்ஷர் பட் டேல், குல்தீப் யாதவ், முகேஷ் குமார் நம்பிக்கை அளிக்கின்றனர்.

தனது வீறுநடையை தொடர பஞ்சாப் அணி தீவிரம் காட்டும். அதேநேரத்தில் தோல்வியில் இருந்து மீண்டு பஞ்சாப்பின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க டெல்லி அணி தனது முழு பலத்தையும் வெளிப்படுத்த முயற்சிக்கும். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இவ்விரு அணிகளும் இதுவரை 34 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் இரு அணிகளும் தலா 17-ல் வெற்றி பெற்றுள்ளன.

இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ராஜஸ்தான் ராயல்ஸ் - ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன.