2026 ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 11-ஆவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஆர்.சி.பி. அணி முதலில் பேட்டிங் செய்தது.
ஆர்.சி.பிி. அணிக்கு துவக்க வீரர்களான பில் சால்ட் மற்றும் விராட் கோடி ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. பில் சால்ட் 30 பந்துகளில் 46 ரன்கள் (3 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்), விராட் கோலி 18 பந்துகளில் 28 ரன்கள் (2 பவுண்டரிகள், 1 சிக்சர்) விளாசினர். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல் தன் பங்கிற்கு 29 பந்துகளில் 50 ரன்கள் (5 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) விளாசினார்.
தொடர்ந்து ஆடிய கேப்டன் ரஜத் பட்டிதர் 19 பந்துகளில் 48 ரன்கள் (1 பவுண்டரி, 6 சிக்சர்கள்) குவிக்க, டிம் டேவிட் 25 பந்துகளில் 70 ரன்கள் (3 பவுண்டரிகள், 8 சிக்சர்கள்) விளாசினர். போட்டி முடிவில் ஆர்.சி.பி. அணி 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 250 ரன்களை குவித்தது.
இமாலய இலக்கை துரத்திய சி.எஸ்.கே. அணிக்கு வழக்கம் போல டாப் ஆர்டர் சொதப்பியது. துவக்க வீரர்களான சஞ்சு சாம்சன் (9), கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் (7) ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினர். கடந்த போட்டியில் அரைசதம் கடந்த ஆயுஷ் மாத்ரே இன்றைய போட்டியில் 1 ரன் எடுத்து அவுட் ஆனார்.
அடுத்து களமிறங்கிய சர்ஃபராஸ் கான் 25 பந்துகளில் 50 ரன்கள் (8 பவுண்டரிகள், 2 சிக்சர்) விளாசினார். இவரைத் தொடர்ந்து ஆடிய வீரர்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். மிடில் ஆர்டரில் பிரசாந்த் வீர் மற்றும் ஜேமி ஓவர்டன் சற்று நம்பிக்கை அளிக்கும் வகையில் ஆடினர். இருவரும் முறையே 43 மற்றும் 37 ரன்களை எடுத்து அவுட் ஆக, சி.எஸ்.கே. தோல்வி கிட்டத்தட்ட உறுதியானது.
போட்டி முடிவில் சி.எஸ்.கே. அணி 19.4 ஓவர்களில் 207 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் ஆர்.சி.பி. அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் தோல்வி அடைந்த நிலையில், நடப்பு ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே. அணி இன்னும் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.