நியூசிலாந்து நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 டி20 போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. இதில் இரு அணிகள் இடையில் முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது.
இந்த தொடரில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.
இந்தப் போட்டி இந்திய நேரப்படி இன்று மதியம் 12.30 மணிக்கு தொடங்குகிறது. இந்தப் போட்டி சோனி ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது. நியூசிலாந்து அணி கடைசியாக வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்து இருந்தது.
இரு அணிகளும் கடைசியாக கடந்த மார்ச் 8-ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெற்ற உலக கோப்பை இறுதிப் போட்டியில் மோதின. இதில் இந்தியா 96 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இருந்தது.
இரு அணிகளும் கடைசியாக மோதிய 5 போட்டியில் இந்தியா 4-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனால் இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது.
டி20 போட்டிகளை பொருத்தவரை இரு அணிகளும் இதுவரை 31 முறை மோதியுள்ளன. இதில், இந்திய அணி 17 போட்டிகளிலும், நியூசிலாந்து அணி 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. மூன்று போட்டிகள் சமனில் முடிந்துள்ளன.
இந்த தொடரை பொருத்தவரை சான்ட்னெர் தலைமையிலான நியூசிலாந்து அணி சொந்த மண்ணில் விளையாடுவதால் மிகுந்த நம்பிக்கையுடன் களமறங்கும். அந்த அணியில் டிம் ஷெய் பெர்ட், பின் ஆலன், கான்வே, டேரில் மிச்சேல், கேப்டன் சான்ட்னெர் போன்ற சிறந்த வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.