ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆர்யவீர் சேவாக் அரை சதத்தால் நேபாளத்தை எளிதில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்தியா.
13-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது.
வரும் 14-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகளில் மோதுகின்றன.
லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா-நேபாளம் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய நேபாள அணி 42.3 ஓவர்களில் 128 ரன்னில் சுருண்டது. அந்த அணியின் தார்ஷ் சோனார் 43 ரன்னும், ஆஷிஷ் லூஹார் 23 ரன்னும் எடுத்தனர்.
இந்தியா சார்பில் இஷான் சூட், அர்ஜூன் ராஜபுத் தலா 3 விக்கெட்டும், யஷ்வீர் கவுட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே அதிரடியாக ஆடியது. சேவாக் மகன் ஆர்யவீர் சேவாக் 4 சிக்சர், 7 பவுண்டரி உடன் அரை சதம் கடந்து 70 ரன் குவித்தார்.
லக்ஷயா ராஜேஷ் அவருக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்து அரை சதமடித்து 53 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், இந்திய அணி 19.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 129 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.