கிரிக்கெட்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த இந்திய வீரர்

தனது பயணத்தை வடிவமைத்த சவால்களையும் மன உறுதியையும் நினைவு கூர்ந்தார்.

இந்திய அணி விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான கே.எஸ். பரத் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதன் மூலம் அவர் தனது இந்திய கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தியதில் பெருமிதம், நன்றியையும் வெளிப்படுத்திய கே.எஸ். பரத் தனது ஓய்வை இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் அறிவித்தார். இந்தியாவுக்காக விளையாடியது தனது வாழ்வின் மிகப்பெரிய கௌரவம் என்று குறிப்பிட்ட அவர், தனது பயணத்தை வடிவமைத்த சவால்களையும் மன உறுதியையும் நினைவு கூர்ந்தார்.

மேலும், தனது குடும்பத்தினரின் தொடர்ச்சியான ஆதரவிற்கும், அன்பு மற்றும் கடின உழைப்பின் மூலம் தனது வளர்ச்சிக்கு அவர்கள் ஆற்றிய பங்கிற்கும் அவர் நன்றி தெரிவித்தார். தனது ஓய்வு முடிவை விவரிக்கும் தொடர்ச்சியான உரை ஸ்லைடுகளை அவர் பதிவிட்டார். முதல் ஸ்லைடில், "பிசிசிஐக்கு நன்றி" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

பெருமிதத்துடனும் நன்றியுணர்வுடனும், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து எனது ஓய்வை அறிவிக்கிறேன். என் நாட்டிற்காக விளையாடியது என் வாழ்வின் மிகப்பெரிய கௌரவம். எனது இந்தப் பயணம் மிகுந்த மன உறுதியையும் வலிமையையும் கோரியது, ஆனால் டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் கௌரவம் ஒவ்வொரு கணத்திற்கும் மதிப்பு வாய்ந்தது.

நான்கு பேர் கொண்ட குடும்பத்தில், இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் அனைவரும் ஒரே கனவை வாழ்ந்தோம். எனக்கு சாதகமான சூழலையும் ஆதரவையும் உருவாக்கித் தந்த என் சகோதரி, அம்மா மற்றும் அப்பாவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள். நான் அவர்களின் அன்பு, ஒழுக்கம் மற்றும் கடின உழைப்பின் விளைபொருள்," என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.

ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த கே.எஸ். பரத், தனது ஏழு டெஸ்ட் போட்டிகளுடன் சர்வதேச பயணத்தை நிறைவு செய்கிறார். இந்தப் போட்டிகளில் அவர் 20.09 சராசரியில் 221 ரன்கள் எடுத்தார், இதில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 44 ஆகும். அந்த ஏழு டெஸ்ட் போட்டிகளில், விக்கெட் கீப்பராக பரத் 21 கேட்சுகளைப் பிடித்ததுடன், ஒரு ஸ்டம்பிங்கையும் செய்தார்.

SCROLL FOR NEXT