இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் நியூ சண்டிகரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜெய்ஸ்வால் 24 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.
அடுத்து கே.எல். ராகுல் உடன் சாய் சுதர்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கே.எல். ராகுல் 86 பந்தில் அரைசதம் அடித்தார். சாய் சுதர்சன் 67 பந்தில் 50 ரன்களை தொட்டார். தொடர்ந்து விளையாடிய அவர், 81 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்திருந்தது.
3-வது விக்கெட்டுக்கு கே.எல். ராகுல் உடன் கேப்டன் சுப்மன் கில் ஜோடி சேர்ந்தார். கே.எல். ராகுல் சிறப்பாக விளையாடி அரைசதத்தை சதமாக மாற்றினார். அவர் 164 பந்தில் சதம் அடித்தார். சதம் அடித்த நிலையில், அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 247 ரன்கள் குவித்திருந்தது.
இதில் ஒரு விசித்திரம் என்னவென்றால், கே.எல். ராகுல் டெஸ்ட் போட்டியில் கடந்த மூன்று முறை சதம் அடித்தபோதிலும், அந்த மூன்று முறையும் சரியாக 100 ரன்களிலேயே ஆட்டமிழந்துள்ளார். லென் ஹட்டன் 19 சதம் அடித்துள்ளார். அதில் 100-ல் 4 முறை ஆட்டமிழந்துள்ளார். கிரேம் வுட் 9 சதம் அடித்துள்ளார். அதில் 3 முறை 100-ல் ஆட்டமிழந்துள்ளார். தற்போது கே.எல். ராகுல் 12 சதத்தில் 3 முறை 100-ல் ஆட்டமிழந்துள்ளார்.
கேப்டன் சுப்மன் கில் அரைசதம் அடித்து விளையாடி வருகிறார்.