கிரிக்கெட்

நாளை 2வது டி20 போட்டி: வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக இந்தியாவின் அதிரடி நீடிக்குமா?

லக்னோவில் நடந்த முதல் டி20 ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நாளை நடைபெற உள்ளது.

ஷாய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது.

நாளை 2-வது டி20 போட்டி

இரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இதையடுத்து, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் லக்னோவில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2வது டி20 போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நாளை நடக்கிறது.

அதிரடி நீடிக்குமா?

ஷ்ரேயஸ் அய்யர் தலைமையிலான இந்திய அணி இந்த ஆட்டத்திலும் அதிரடியை வெளிப்படுத்துமா என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆட்டத்தில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் வீரர்களின் செயல்பாடு மிகவும் சிறப்பாக இருந்தது.

பேட்டிங்கில் கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர், இஷான் கிஷன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா ஆகியோரும், பந்துவீச்சில் நமன்தீர், குல்தீப் யாதவ், அக்‌சர் படேல் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

நாளைய போட்டிக்கான அணியில் மாற்றம் இருக்காது என்றே கருதப்படுகிறது. இதனால் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு கிடைப்பது கடினமே.

பதிலடி ஆர்வம்

முதல் ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து 1-1 என்ற சமநிலையைப் பெறவேண்டும் என்ற ஆர்வத்தில் வெஸ்ட் இண்டீஸ் இருக்கிறது.

பேட்டிங்குடன் ஒப்பிடும்போது பந்துவீச்சு பலவீனமாகவே காணப்படுகிறது. கேப்டன் ஷாய் ஹோப், ரூதர் போர்ட், ஹெட்மயர், போவேல், அகீல் உசேன் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.

இரு அணிகளும் டி20 போட்டியில் 32 முறை மோதி உள்ளன. இதில் இந்தியா 21-ல், வெஸ்ட் இண்டீஸ் 10-ல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவு இல்லை.

நாளைய போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

SCROLL FOR NEXT