பெண்கள் ஆசிய கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்திய அணி வங்கதேசம் அணியுடன் நாளை மோதுகிறது.
துபாயில் பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. கடந்த 28-ம் தேதி தொடங்கிய இத்தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து, ஹாங்காங் அணிகளும், குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா அணிகளும் இடம்பெற்றன.
நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரகம் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 103 ரன்கள் மட்டுமே எடுத்தது.
தொடர்ந்து ஆடிய ஐக்கிய அரபு அமீரக அணி, வங்கதேசத்தின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
இறுதியில் ஐக்கிய அரபு அமீரக அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 69 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் வங்கதேச அணி 34 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
இந்நிலையில், நாளை நடைபெறும் முதல் அரையிறுதியில் வங்கதேச அணி இந்தியாவை எதிர்கொள்கிறது.
மற்றொரு அரையிறுதியில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோத உள்ளன.