ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே நியூ சண்டிகரில் நடைபெற்ற ஒரே ஒரு டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 300 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புதிய சாதனை படைத்தது.
அடுத்து நடந்த 2 ஒருநாள் போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றது. தர்மசாலாவில் நடைபெற்ற முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், லக்னோவில் நடந்த 2வது போட்டியில் 170 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில், இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நாளை நடக்கிறது.
சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இந்தப் போட்டியிலும் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெறும் ஆர்வத்தில் உள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி இதுவரை தோற்றதில்லை. 6 போட்டியில் 5- ல் வெற்றி பெற்றது. ஒரு ஆட்டம் சமன் ஆனது. இந்த நிலையை நீட்டித்துக் கொள்ளும் வேட்கையில் உள்ளது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இந்திய அணி சமபலத்துடன் திகழ்கிறது.
கேப்டன் சுப்மன் கில் மிகவும் நல்ல பார்மில் உள்ளார். அவர் 1 சதம், 1 அரை சதத்துடன் 238 ரன்கள் குவித்துள்ளார். இஷான் கிஷன் 1 சதத்துடன் 159 ரன் எடுத்துள்ளார். குர்னூர் பிரார் (6 விக்கெட்), அர்ஷ்தீப் சிங் (5 விக்கெட்) ஆகியோர் சிறப்பாக பந்து வீசி வருகிறார்கள். 8 வீரர்களே 2 ஆட்டத்திலும் விளையாடினார்கள். நாளைய ஆட்டத்தில் சுழற்சி முறையில் வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹஸ்மத்துல்லா ஷாகிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி ஆறுதல் வெற்றிக்காக காத்திருக்கிறது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இழந்த அந்த அணி, கடைசி போட்டியில் வெற்றிக்காக கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளைய ஆட்டம் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
கடைசி ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ரானா சேர்க்கப்பட்டுள்ளார். முழங்காலில் ஏற்பட்ட காயத்துக்காக சிகிச்சை பெற்ற அவர் கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பயிற்சி மையத்தில் மறுவாழ்வு பயிற்சியை மேற்கொண்டார். இந்தப் பயிற்சியை ஹர்ஷித் ரானா நிறைவு செய்ததையடுத்து அவர் இந்திய அணியில் இணைந்துள்ளதாக கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.