ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் இந்திய அணி வெற்றிபெற 228 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆப்கானிஸ்தான் அணி.
ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது. வரும் 14-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகளில் மோதுகின்றன.
லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
முதல் லீக் போட்டியில் இந்திய அணி நேபாளத்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 2வது லீக் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்தது. 3வது லீக் போட்டியில் ஆர்யவீர் சேவாக்கின் அதிரடி சதத்தால் ஐக்கிய அரபு அமீரகம் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா.
இந்நிலையில், இன்று நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி, ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விகெட்டுக்கு 227 ரன்கள் எடுத்தது.
நோர்மன் சலார்சாய், ஷான் பைசல் ரஹிமி அரை சதம் கடந்து 51 ரன்னில் அவுட்டாகினர். கேப்டன் சோஹாலி கான் 36 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்தியா சார்பில் இஷான் சூட் 3 விக்கெட்டும், ஆர்யன் சவ்சானி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.