இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே மகளிர் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையிலான முதல் இரண்டு டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றி இருந்தது.
இந்த நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணியை 92 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய மகளிர் அணி டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
ராய்பூரில் நடந்த இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணிக்கு தொடக்கம் கொடுத்த ஷபாளி வெர்மா மற்றும் அனுஷ்கா ஷர்மா ஜோடி ஆரம்பத்திலேயே ரன் குவிக்க தொடங்கினர்.
அனுஷ்கா ஷர்மா 20 பந்துகளில் 28 ரன்களை எடுத்து பெவிலியன் திரும்பினார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய நிக்கி பிரசாத் 9 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார்.
மிடில் ஆர்டரில் ஹர்மன்பிரீத் கௌர் அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் கவனம் செலுத்தினார். இவர் 41 பந்துகளில் 91 ரன்களை (10 பவுண்டரிகள், 5 சிக்சர்) விளாசி கடைசி வரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். ஷபாளி வெர்மா 37 பந்துகளில் 69 ரன்களை எடுத்திருந்தார். இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 216 ரன்களை எடுத்தது.
ஜிம்பாப்வே தரப்பில் சிறப்பாக பந்துவீசிய பிலொவ்டு பிஸா 3 விக்கெட்டுகளையும், சிபந்தா, மகுஷா மற்றும் யாஷா தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.
சற்றே கடின இலக்கை துரத்திய ஜிம்பாப்வே அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க வீராங்கனை கெலிஸ் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய மொடெஸ்டர் வெறும் 1 ரன்னுக்கு நடையை கட்டினார்.
பிறகு களமிறங்கிய பிலொவ்டு பிஸா நிதானமாக ஆடினார். மற்றொரு தொடக்க வீராங்கனையான ஷேர்ன் மேயர்ஸ் உடன் ஜோடி சேர்ந்த இவர் 50 பந்துகளில் 44 ரன்களை எடுத்த போது அவுட் ஆகி வெளியேறினார். ஷேர்ன் மேயர்ஸ் தன் பங்கிற்கு 49 பந்துகளில் 60 ரன்களை எடுத்த போது அவுட் ஆகி வெளியேறினார்.
இவர்களை தொடர்ந்து களமிறங்கிய மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களையே எடுத்தனர். இதனால் ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 124 ரன்களை மட்டுமே எடுத்தது.
இந்திய அணி சார்பில் நந்தனி ஷர்மா 3 விக்கெட்டுகளையும், க்ராந்தி கௌட், அருந்ததி ஷெட்டி, தீப்தி ஷர்மா மற்றும் நிக்கி பிரசாத் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதனால் இந்திய அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியது.