ஜேக்கப் மார்ட்டின் மீது கடந்த 2004-ம் ஆண்டு இங்கிலாந்து குடிவரவு முத்திரை, பயண ஏற்பாடுகள் மற்றும் நிதிப் பரிவர்த்தனைகள் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜேக்கப் மார்ட்டின். இவர் இந்திய அணிக்காக 10 ஆண்டுகள் விளையாடியுள்ளார். இவர் மீது 2004-ம் ஆண்டு மீது டெல்லியில் உள்ள பாட்டியாலா நீதிமன்றத்தில் போலியான இங்கிலாந்து குடிவரவு முத்திரை, பயண ஏற்பாடுகள் மற்றும் நிதிப் பரிவர்த்தனைகள் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு மீதான விசாரணை முடிவில் "ஜேக்கப் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியவில்லை. நிதிப் பரிவர்த்தனைகள் அல்லது அஜ்வா ஸ்போர்ட்ஸ் கிளப்பின் மீதான அவரது உரிமை அல்லது கட்டுப்பாடு குறித்து நம்பகமான சான்றுகள் எதுவும் இல்லை. பல சாட்சிகளும் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கத் தவறிவிட்டனர்" எனக் கூறி நீதிமன்றம் ஜேக்கப் மார்ட்டினை விடுதலை செய்துள்ளது.
2004-ல் விளையாடுவதற்காக எனது தலைமையிலான ஒரு அணி இங்கிலாந்துக்குச் சென்றிருந்தது. அந்த அணியில் சென்ற அனைவரும் திரும்பி வந்தனர். ஆனால் ஒரு வீரர் மட்டும் அங்கேயே தங்கிவிட்டார். அவரது விசா 6 மாத காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பதால், அவர் 6 மாதங்கள் வரை அங்கு தங்கியிருக்கலாம். ஆனால் அவர் அனுமதிக்கப்பட்ட காலத்தையும் தாண்டி அங்கேயே தங்கிவிட்டார்.
பின்னர், யாரோ ஒருவரின் உதவியுடன் அவர் போலியான விசா முத்திரையைப் (fake stamping) பெற்றுக்கொண்டார். அந்தப் போலியான முத்திரையுடன் இந்தியா திரும்ப முயன்றபோது அவர் பிடிபட்டார். இங்கிலாந்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட அவர், டெல்லியின் IGI விமான நிலையத்தில் பிடிபட்டு விசாரணையை எதிர்கொண்டார்.
முதல் தகவல் அறிக்கையில் (FIR) என் பெயர் கூட இடம்பெறவில்லை. ஆனால் விசாரணை தொடங்கியபோது, நான் ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரராகவும் பிரபலமான நபராகவும் இருந்ததால், இந்த வழக்கில் என் பெயரும் சேர்க்கப்பட்டது. வழக்கு நடந்து கொண்டிருந்த அந்த 22 ஆண்டுகளும் எனக்கு மிகுந்த மன உளைச்சலாக இருந்தது. பிசிசிஐ-யிடமிருந்தும் எனக்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. அதே சமயம் ரெயில்வேயில் இருந்த எனது வேலையையும் இழந்தேன்.
ஆனால் இப்போது வந்துள்ள இந்தத் தீர்ப்பின் மூலம் நான் குற்றமற்றவன் என்று நிரூபிக்கப்பட்டு முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளேன். இது என் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனையாகவும், மிகப்பெரிய நிம்மதியைத் தருவதாகவும் அமைந்துள்ளது. 22 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்துள்ள இந்த முடிவு என் வாழ்க்கையையே மாற்றியமைக்கும் ஒரு முக்கிய நிகழ்வாக இருக்கிறது.
இவ்வாறு ஜேக்கப் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.