வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் இந்திய அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் போட்டி மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என வென்று கைப்பற்றி அசத்தியது.
இதைத் தொடர்ந்து நடந்த முதல் டி20 போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரண்டாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. இந்த நிலையில், இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான மூன்றாவது டி20 போட்டி இன்று (அக்.11) இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
முதல் இரு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்ற நிலையில், இன்றைய மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஷாய் ஹோப் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஜோடி களமிறங்கியது. சஞ்சு சாம்சன் 3 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அபிஷேக் சர்மா அதிரடியாக ஆடி 30 பந்துகளில் 69 ரன்களை விளாசி பெவிலியன் திரும்பினார். பிறகு களமிறங்கிய இஷான் கிஷன் 18 பந்துகளில் 37 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். பிறகு வந்தவர்களில் திலக் வர்மா (28 ரன்கள்), நமன் திர் (10 ரன்கள்) நிதிஷ் குமார் ரெட்டி (21 ரன்கள்), அக்சர் படேல் (20 ரன்கள்), அர்ஷ்தீப் சிங் (11 ரன்கள்), பிரின்ஸ் யாதவ் (13 ரன்கள்) எடுத்தனர். இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 223 ரன்கள் குவித்தது.
வெஸ்ட் இண்டீஸ் போராட்டம் வீண்:
சற்றே கடின இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன் ஷாய் ஹோப் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். கமில் பூரான் மற்றும் ஹெட்மயர் ஜோடி அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இருவரும் முறையே 27 பந்துகளில் 42 ரன்களும், 26 பந்துகளில் 43 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர்.
ரூதர்ஃபோர்டு 20 பந்துகளில் 32 ரன்களும், குயின்டன் சாம்ப்சன் 15 பந்துகளில் 21 ரன்களும், கீமோ பால் 10 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசியில் ஆடிய ஷமர் ஸ்பிரிங்கர் 11 பந்துகளில் 35 ரன்களை எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 209 ரன்களையே எடுத்தது.
இதனால் இந்திய அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளையும், நமன் திர் 2 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி தலா 1 விக்கட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.