கிரிக்கெட்

மகளிர் ஆசிய கோப்பை : இலங்கையை வீழ்த்தி 8-ஆவது முறையாக கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் அணி

இந்திய மகளிர் அணி சார்பில் ஸ்ரீ சரானி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

மகளிர் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் அணி.

10-ஆவது மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் துபாயில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் லீக் சுற்று முடிவில் இரு பிரிவுகளை சேர்ந்த நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.

அரையிறுதி போட்டிகளில் வெற்றி பெற்ற இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில், இவ்விறு அணிகள் இடையிலான இறுதிப் போட்டி இன்று நடந்தது.

இந்திய அணி பேட்டிங்:

பரபரப்பான இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணிக்கு தொடக்கம் கொடுத்த ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாளி வெர்மா ஜோடி சிறப்பாக ஆடி ரன் குவிப்பில் கவனம் செலுத்தினர். இந்த ஜோடி முறையே 59 மற்றும் 68 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து களமிறங்கியவர்களில் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 14 ரன்களும் ரிச்சா கோஷ் 17 எடுத்து அவுட் ஆகினர். 20 ஓவர்கள் முடிவில் இந்திய மகளிர் அணி 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்களை எடுத்தது. இலங்கை மகளிர் அணி சார்பில் மித்தாலி அயோத்யா, சமாரி அட்டப்பட்டு மற்றும் சமுடி பிரபோடா தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

இலங்கை சொதப்பல்:

இலங்கை மகளிர் அணி 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. இலங்கை அணிக்கு தொடக்கம் கொடுத்த இமெஷா துலானி 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இவருடன் களமிறங்கிய கேப்டன் சமாரி அட்டப்பட்டு நிதானமாக ஆடி 32 பந்துகளில் 36 ரன்களை எடுத்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய விஷ்மி குணரத்ன 22 பந்துகளில் 20 ரன்களை எடுத்தார்.

மிடில் ஆர்டரில் நிலக்ஷிகா சில்வா 16 பந்துகளில் 22 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இவர்கள் தவிர்த்து மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இலங்கை மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 111 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால், இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

இந்திய மகளிர் அணி சார்பில் ஸ்ரீ சரானி 4 விக்கெட்டுகளையும், தீப்தி ஷர்மா 3 விக்கெட்டுகளையும், க்ரான்டி கௌட், ஷஃபாளி வெர்மா மற்றும் பிரேமா ராவத் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

SCROLL FOR NEXT