கிரிக்கெட்

திலக் வர்மா அதிரடி: 2வது டி20 போட்டியிலும் நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா

நியூசிலாந்தின் மிட்செல் சாண்ட்னர் 4 விக்கெட் வீழ்த்தினார்.

திலக் வர்மாவின் பொறுப்பான ஆட்டத்தால் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் இந்திய அணி வென்று 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது. வைபவ் சூர்யவன்ஷி பிளேயிங் லெவனில் இடம்பிடித்தார்.

அதன்படி, முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 180 ரன்கள் குவித்தது. 41 ரன் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

கிளென் பிலிப்ஸ், ஜேக்கப்ஸ் அரை சதம்

4வது விக்கெட்டுக்கு கிளென் பிலிப்ஸ், பெவன் ஜேக்கப்ஸ் ஜோடி இணைந்து அதிரடியில் மிரட்டியது. இருவரும் அரைசதம் கடந்தனர்.

கிளென் பிலிப்ஸ் 43 பந்தில் 70 ரன்னும், பெவன் ஜேக்கப்ஸ் 46 பந்தில் 58 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். 4வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 76 பந்தில் 116 ரன்கள் குவித்தது.

இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டும், புவனேஷ்வர் குமார், பிரின்ஸ் யாதவ், நிதிஷ்குமார் ரெட்டி தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. மிட்செல் சாண்ட்னர் அபார பந்துவீச்சால் அபிஷேக் சர்மா, ஷ்ரேயஸ் அய்யர், அக்சர் படேல் குறைந்த ரன்னில் அவுட்டாகினர். அதிரடியாக ஆடிய நமன் தீரை 31 ரன்னில் அவுட்டாக்கினார்.

திலக் வர்மா அசத்தல்

7வது விக்கெட்டுக்கு திலக் வர்மா, நிதிஷ்குமார் ரெட்டி இணைந்தனர். திலக் வர்மா அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.

இறுதியில், இந்திய அணி 19.5 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 181 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், டி20 தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.

திலக் வர்மா 51 ரன்னும், நிதிஷ்குமார் ரெட்டி 26 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

SCROLL FOR NEXT