கிரிக்கெட்

தடுமாறிய இந்தியா, கைகொடுத்த டக்வொர்த்: 2வது ஒருநாள் போட்டியிலும் வெற்றி

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 4 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

முதலில் நடந்த டி20 தொடரை இந்திய அணி 3-2 என கைப்பற்றியது.

அடுத்து நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி வெல்லிங்டன்னில் உள்ள ஹென்ரி மைதானத்தில் இன்று நடந்தது. மழை குறுக்கிட்டதால் போட்டி 47 ஓவராகக் குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

மிட்செல் அரை சதம்

அதன்படி, முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி இந்திய பந்து வீச்சில் சிக்கி திணறியது. சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன. அந்த அணியின் டேரில் மிட்செல் அரை சதம் கடந்து 55 ரன்னில் அவுட்டானார்.

மிட்செல் சாண்ட்னர் 31 ரன்னும், ஹென்ரி நிகோல்ஸ் 11 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.

பிரார் 4 விக்கெட்

இந்திய அணி சார்பில் குர்னூர் பிரார் 4 விக்கெட்டும், ஆகிப் நபி, அன்ஷுல் கம்போஜ், அக்சர் படேல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. சுப்மன் கில் டக் அவுட்டானார். விராட் கோலி 7 ரன்னில் அவுட்டானார்.

மழையால் ஆட்டம் பாதிப்பு

ரோகித் சர்மா 23 ரன்னிலும், அக்சர் படேல் 7 ரன்னிலும், நமன் தீர் 12 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் கே.எல்.ராகுல் நிதானமாக ஆடினார்.

இந்திய அணி 26 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது.

இதையடுத்து, டக்வொர்த் லீவிஸ் முறை கடைப்பிடிக்கப்பட்டது.

இதில் இந்திய அணி 109 ரன்கள் எடுத்திருக்க வேண்டும். இந்தியா 113 ரன் எடுத்திருந்ததால் 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஆட்ட நாயகன் பிரார்

இதன்மூலம் ஒருநாள் போட்டித் தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. ஆட்ட நாயகனாக குர்னூர் பிரார் அறிவிக்கப்பட்டார்.

SCROLL FOR NEXT