கிரிக்கெட்

ஒரே டி20 போட்டி: ஜப்பானிடம் திரில் வெற்றி பெற்றது இந்தியா

இந்திய அணியில் அதிகபட்சமாக ஷ்ரேயஸ் அய்யர் 16 ரன் எடுத்தார்.

ஜப்பானுக்கு எதிரான ஒரே ஒரு டி20 போட்டியில் இந்திய அணி 2 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி அந்நாட்டு அணியுடன் ஒரேஒரு சர்வதேச டி20 போட்டியில் இன்று விளையாடியது.

இந்தியா, ஜப்பான் இடையேயான தூதரக உறவு ஏற்பட்டு 75 ஆண்டு ஆன நிலையில் அதை கொண்டாடும் வகையில், இரு நாடுகளுக்கும் இடையே இந்த டி20 போட்டி நடைபெற்றது. இந்தியா - ஜப்பான் கிரிக்கெட் அணிகள் இடையே நடைபெறும் முதல் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி இதுவாகும்.

டாஸ் தாமதம்

ஜப்பானின் டொஷிகி மாகாணத்தில் உள்ள சானோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது.

காலை 9.30 மணிக்கு போட்டி தொடங்க இருந்த நிலையில், மோசமான வானிலையால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டது.

வானிலை சீரான நிலையில் காலை 11.45 மணிக்கு டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. போட்டி 5 ஓவராக குறைக்கப்பட்டது.

அபிஷேக் சர்மா டக் அவுட்

அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. முதல் ஓவரின் கடைசி பந்தில் அபிஷேக் சர்மா டக் அவுட்டானார்.

சஞ்சு சாம்சன் 9 ரன்னும், இஷான் கிஷன் 3 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். அதிகபட்சமாக ஷ்ரேயஸ் அய்யர் 16 ரன்னில் அவுட்டானார்.

இந்தியா திணறல்

இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 32 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

ஜப்பான் அணி சிறப்பாக பந்து வீசி இந்திய அணியை கட்டுப்படுத்தியது.

இதையடுத்து, 33 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஜப்பான் களமிறங்கியது.

போராடிய ஜப்பான்

முதல் ஓவரில் தொடக்க வீரர் லச்சியன் யாமாமோடோ ரன் அவுட்டானார். முதல் ஓவரில் அந்த அணி 2 ரன்கள் எடுத்தது.

2வது ஓவரில் 2 விக்கெட்டுக்கு 8 ரன்கள் எடுத்தது.

3வது ஓவரில் ஜப்பான் அணி 10 ரன்கள் எடுத்தது.

கடைசி 2 ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்டது.

4வது ஓவரில் 7 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட்டை இழந்தது.

2 ரன்னில் இந்தியா வெற்றி

கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஜப்பான் அணி 5 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 2 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் வலுவான இந்திய அணிக்கு ஜப்பான் அணி கடும் சவாலாக விளங்கியது என்றால் மிகையில்லை.

SCROLL FOR NEXT