கிரிக்கெட்

ஜூனியர் ஆசிய கோப்பை: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா

இந்தியாவின் ஆர்யவீர் சேவாக் அரை சதம் கடந்து 51 ரன்னில் அவுட்டானார்.

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது.

முதல் லீக் போட்டியில் நேபாளத்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. 2வது லீக் போட்டியில் இந்தியா பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்தது. 3வது லீக் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா.

இந்தியா-ஆப்கானிஸ்தான் மோதல்

இந்நிலையில், இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி, ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விகெட்டுக்கு 227 ரன்கள் எடுத்தது. நோர்மன் சலார்சாய், ஷான் பைசல் ரஹிமி அரை சதம் கடந்து 51 ரன்னில் அவுட்டாகினர். கேப்டன் சோஹாலி கான் 36 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்தியா சார்பில் இஷான் சோத் 3 விக்கெட்டும், ஆர்யன் சவ்சானி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

லக்சயா ராஜேஷ், ஆர்யவீர் சேவாக் அரைசதம்

இதையடுத்து, 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான லக்சயா ராஜேஷ் ராய் சந்தானி, ஆர்யவீர் சேவாக் இருவரும் அதிரடியாக ஆடினர். இருவரும் அரை சதம் கடந்தனர்.

முதல் விக்கெட்டுக்கு 117 ரன்கள் சேர்த்த நிலையில், ஆர்யவீர் சேவாக் 51 ரன்னில் அவுட்டானார்.

அடுத்து இறங்கிய விகே வினீத் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார்.

சதமடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் லக்சயா ராஜேஷ் ராய் சந்தானி 93 ரன்னில் வெளியேறினார்.

இறுதியில், இந்திய அணி 36.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 230 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

நாளை மறுதினம் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் இந்திய அணி, நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் அணியை சந்திக்கிறது.

SCROLL FOR NEXT