சாய் சுதர்சன்- தேவ்தத் படிக்கல்
கிரிக்கெட்

சூப்பர் கம்பேக்: தேவ்தத் படிக்கல் 199, சாய் சுதர்சன் 91- நியூசிலாந்து ஏ அணிக்கு பதிலடி..!

இந்தியா ஏ முதல் இன்னிங்சில் 113 ரன்களில் சுருண்டாலும், 2-வது இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 488 ரன்கள் குவித்துள்ளது.

இந்தியா ஏ- நியூசிலாந்து ஏ அணிகளுக்கு இடையில் மூன்று அதிகாரப்பூர்வ மற்ற போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று முன்தினம் நியூசிலாந்தில் உள்ள லிங்கனில் (Lincoln) தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து ஏ அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. பந்து வீச்சுக்கு சாதகமான வகையில் கிரீன் பிட்ச் தயார் செய்யப்பட்டிருந்தது. இதில் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறினர்.

113 ரன்களில் சுருண்ட இந்தியா ஏ

தொடக்க வீரர்கள் ஜெய்ஸ்வால் (17), கே.எல். ராகுல் (0), சாய் சுதர்சன் (0), துருவ் ஜூரல் (1), வாஷிங்டன் சுந்தர் (0) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். தேவ்தத் படிக்கல் (32), யாஷ் ரதோட் (44 நாட்அவுட்) ஆகியோர் தாக்குப்பிடித்து விளையாட இந்தியா ஏ முதல் இன்னிங்சில் 113 ரன்களில் சுருண்டது.

நியூசிலாந்து ஏ 317 ரன்கள் குவிப்பு

பின்னர் நியூசிலாந்து ஏ அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. நியூசிலாந்து ஏ 317 ரன்களில் ஆல்அவுட் ஆனது. இந்திய அணி சார்பில் அன்ஷுல் கம்போஜ், அகிப் நபி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். நியூசிலாந்து ஏ அணி சார்பில் கேப்டன் மரியு 76 ரன்கள் விளாசினார். டீன் பாக்ஸ்கிராஃப்ட் 51 ரன்கள் சேர்த்தார்.

ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் ஏமாற்றம்

பின்னர் 204 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்தியா ஏ 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஜெய்ஸ்வால் 5 ரன்களிலும், கே.எல். ராகுல் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 3-வது விக்கெட்டுக்கு தேவ்தத் படிக்கல் உடன் சாய் சுதர்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நியூசிலாநது ஏ அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடித்து விளையாடியது. தேவ்தத் படிக்கல் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார்.

நேற்றைய 2-வது நாள் முடிவில் இந்தியா ஏ 2 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்துள்ளது. தேவ்தத் படிக்கல் 56 ரன்களுடனும், சாய் சுதர்சன் 39 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்தியா ஏ 98 ரன்கள் பின்தங்கியிருந்தது.

தேவ்தத் படிக்கல், சாய் சுதர்சன் அபாரம்

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் நிலைத்து நின்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தேவ்தத் படிக்கல் சிறப்பாக விளையாடி சதம் விளாசினார். அதோடு சதத்தை டபுள் செஞ்சரியாக மாற்றும் வகையில் விளையாடினார். சாய் சுதர்சன் அரைசதம் அடித்து சதமாக மாற்ற முயற்சித்தார்.

ஆனால், தேவ்தத் படிக்கல் 199 ரன்களில் ஆட்டமிழந்து டபுள் செஞ்சுரி வாய்ப்பை இழந்தார். சாய் சுதர்சன் 91 ரன்களில் ஆட்டமிழந்தார்.

வாஷிங்டன் சுந்தர் அரைசதம்

ஜூரல் 2 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார். அதன்பின் வந்த யாஷ் ரதோட் 66 ரன்கள் சேர்த்தார். வாஷிங்டன் சுந்தர் அரைசதம் (51) அடித்து ஆட்டமிழக்காமல் இருக்க இந்தியா ஏ 3-வது நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 488 ரன்கள் குவித்துள்ளது.

தற்போது வரை இந்தியா ஏ 284 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் 50 ரன்களுக்கு மேல் அடித்து காலை உணவு இடைவேளை வரை தாக்குப்பிடித்தால், போட்டி டிராவில் முடியவடைய வாய்ப்புள்ளது.

முதல் இன்னிங்சில் 113 ரன்களில் சுருண்டாலும், 2-வது இன்னிங்சில் இந்தியா ஏ அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT