கிரிக்கெட்

2வது டெஸ்ட்- சாய் சுதர்சன், படிக்கல் அபாரம்: இலங்கை ஏ-க்கு எதிராக இந்தியா ஏ முதல் இன்னிங்சில் 541/8

2வது விக்கெட்டுக்கு சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல் ஜோடி 182 ரன்கள் சேர்த்தது.

இலங்கை ஏ அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில், இந்திய ஏ அணி 541 ரன்கள் குவித்துள்ளது. சாய் சுதர்சன் 168 ரன்னும், படிக்கல் 94 ரன்னும் அடித்தனர்.

இலங்கை சென்றுள்ள இந்திய ஏ அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் சிறப்பாக விளையாடியதால் ஆட்டம் டிரா ஆனது.

கல்லேயில் 2-வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய ஏ அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய இலங்கை ஏ அணி முதல் இன்னிங்சில் 110 ஓவரில் 366 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் ஷகன் அரச்சிகே சதமடித்து 127 ரன்கள் எடுத்தார்.

நவனிது பெர்ணான்டோ 44, அஞ்சல பந்தாரா 42, பவந்தா 39, அஷென் பந்தாரா 34 ரன்னும் எடுத்தனர்.

இந்திய ஏ அணி சார்பில் குர்நூர் பிரார், சரண்ஸ் ஜெய்ன் தலா 4 விக்கெட்டும், யாஷ் தாகூர் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்.

இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அமன் மகோதே 38 ரன்னில் அவுட்டானார்.

2வது விக்கெட்டுக்கு சாய் சுதர்ஷனுடன் தேவ்தத் படிக்கல் இணைந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தது.

இரண்டாம் நாள் முடிவில் இந்திய ஏ அணி ஒரு விக்கெட்டுக்கு 247 ரன்கள் எடுத்திருந்தது. சாய் சுதர்சன் சதமடித்து 104 ரன்னும், தேவ்தத் படிக்கல் 94 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது, சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட தேவ்தத் படிக்கல் 94 ரன்னில் அவுட்டானார். ருதுராஜ் கெய்க்வாட் 13 ரன்னில் வெளியேறினார்.

4வது விக்கெட்டுக்கு சாய் சுதர்சன், துருவ் ஜுரல் ஜோடி 78 சேர்த்த நிலையில் சாய் சுதர்சன் 168 ரன்னில் ஆட்டமிழந்தார்.

துருவ் ஜுரல் நிதானமாக ஆடி அரை சதம் கடந்து 53 ரன்னில் அவுட்டானார்.

கடைசி கட்டத்தில் சிறப்பாக ஆடிய சரன்ஷ் ஜெயின் அரை சதம் கடந்து 68 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

மூன்றாம் நாள் இறுதியில், இந்தியா ஏ அணி 8 விக்கெட்டுக்கு 541 ரன்கள் குவித்துள்ளது. இலங்கை ஏ அணியை விட 175 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டியிலும் சிறப்பாக ஆடி சதமடித்த சாய் சுதர்சன் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

இலங்கை ஏ அணி சார்பில் கேஷரா நுவந்தா 4 விக்கெட்டும், திலும் சுதீரா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.