இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி ஒரு டெஸ்ட், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி நியூ சண்டிகரில் முல்லன்பூர் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் மானவ் சுதார் அறிமுகம் ஆனார்.
அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி சிறப்பாக ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல், கேப்டன் சுப்மன் கில் பொறுப்புடன் ஆடி சதமடித்தனர். ரிஷப் பண்ட் அரை சதம் கடந்தார். முதல் நாள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 368 ரன்கள் எடுத்திருந்தது. சுப்மன் கில் 103 ரன்னும், ரிஷப் பண்ட் 50 ரன்னும் எடுத்திருந்தனர்.
இந்நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆரம்பம் முதலே இந்திய அணி அதிரடியாக ஆடியது. சுப்மன் கில் 126 ரன்னும், துருவ் ஜுரல் 19 ரன்னும் எடுத்து வெளியேறினர். ரிஷப் பண்ட் 81 ரன்னில் ஆட்டமிழந்தார். உணவு இடைவேளையில் இந்திய அணி 6 விக்கெட்டுக்கு 475 ரன்கள் குவித்தது.
இந்நிலையில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 564 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. வாஷிங்டன் சுந்தர் அரை சதம் கடந்து 52 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
ஆப்கானிஸ்தான் சார்பில் முகமது சலீம் சபி 6 விக்கெட்டும், ஜியாவுர் ரகுமான்ஷரிபி, ஹஷ்மதுல்லா ஷாஹிடி தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.