இலங்கை, இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் முத்தரப்பு ஏ ஒருநாள் தொடர் இலங்கையில் நடந்து வருகிறது.
இந்நிலையில், இலங்கையில் நடைபெற்ற 5வது லீக் போட்டியில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. தம்புல்லாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 319 ரன்கள் குவித்தது. அதிரடி ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி 28 பந்துகளில் 38 ரன் எடுத்து அவுட்டானார். முதல் விக்கெட்டுக்கு சூர்யவன்ஷி-பிரியான்ஷ் ஆர்யா சிங் ஜோடி 75 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ஆடிய பிரியான்ஷ் ஆர்யா 42 பந்தில் 9 பவுண்டரி உள்பட 58 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ருதுராஜ் கெய்க்வாட் 30 ரன்னில் வெளியேறினார்.
4வது விக்கெட்டுக்கு திலக் வர்மா, குமார் குஷாக்ரா ஜோடி இணைந்தது. இருவரும் அரை சதம் கடந்தனர். இந்த ஜோடி 104 ரன்கள் சேர்த்த நிலையில் குஷாக்ரா 58 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து திலக் வர்மாவும் 59 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய விப்ரஜ் நிகாம் 30 ரன்கள் எடுத்தார்.
ஆப்கானிஸ்தான் சார்பில் தாவூத்சாய், அப்துல்லா அகமதுசாய், பர்மனுல்லா சபி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து 320 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. அந்த அணியின் பஹீர் ஷா அரை சதம் கடந்து 57 ரன்னில் ஆட்டமிழந்தார். பைசல் ஷினோஜாடா 46 ரன்னிலும், கேப்டன் இம்ரான் மிர் 30 ரன்னிலும் அவுட்டாகினர். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 36.5 ஓவரில் 218 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா ஏ அணி முத்தரப்பு தொடரின் இறுதிப் போட்டி வாய்ப்பை தக்கவைத்துள்ளது.