கிரிக்கெட்

4வது டி20: இங்கிலாந்துக்கு 159 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா

இந்திய கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் சிறப்பாக ஆடி 80 ரன்களை குவித்தார்.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில், இங்கிலாந்து 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

முதல் போட்டி மழையால் ரத்தாக, இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து இன்று இரு அணிகளுக்கு இடையேயான 4-ஆவது டி20 போட்டி பிரிஸ்டலில் உள்ள கவுண்டி மைதானத்தில் நடைபெற்றது.

தொடக்கம் தடுமாற்றம்:

இந்நிலையில் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்தப் போட்டியில் இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய வைபவ் சூர்யவ்ஷி 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மற்றொரு துவக்க வீரரான அபிஷேக் சர்மா 16 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து களமிறங்கிய இஷான் கிஷன் வெறும் 4 ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி துவக்கத்திலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

கேப்டன் அபாரம்:

பிறகு களமிறங்கிய கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் மற்றும் ஷிவம் துபே நிதானமாக ஆடி ரன் குவிப்பில் கவனம் செலுத்தினர். ஷிவம் துபே 22 ரன்களை எடுத்து ஆட்டமிழக்க திலக் வர்மா 11 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 5 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 158 ரன்களை எடுத்தது. இந்தியா தரப்பில் கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் சிறப்பாக ஆடி 80 ரன்களை குவித்தார்.

இங்கிலாந்து சார்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜோஷ் டங் தலா இரண்டு விக்கெட்டுகளையும், வில் ஜாக்ஸ் மற்றும் ஆதில் ரஷித் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.