ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற அரையிறதி சுற்றுப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகள் மோதின. தி ஓவல் மைதானத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
இதைத் தொடர்ந்து பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் ஹேலி மேத்யூஸ் 28 பந்துகளில் 30 ரன்களையும், கியானு ஜோசப் 16 ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ஷெமைன் கேம்ப்பெல் 22 ரன்களை எடுக்க அடுத்தடுத்து வந்த ஸ்டஃபைன் மற்றும் கிளாக்ஸ்டன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.
எளிய இலக்கு:
20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்களையே எடுத்தது. ஆஸ்திரேலிய மகளிர் அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய சோபி மொலினக்ஸ், ஆஷ்லெய்க் மற்றும் ஜார்ஜியா வேரெம் தலா 2 விக்கெட்டுகளையும், அன்னபெல் சுதர்லாந்து 1 விக்கெட் கைப்பற்றினர்.
ஆஸி. அதிரடி:
எளிய இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு ஜார்ஜியா வோல் 16 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். பெத் மூனி அதிரடியாக ஆடி 36 பந்துகளில் 61 ரன்களை (8 பவுண்டரிகள்) விளாசினார். ஆஸ்திரேலிய அணி 13 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 127 ரன்களை எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலிய அணி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.