ஐ.சி.சி. நடத்தும் 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஆப்பிரிக்க நாடுகளான தென்ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. அக்டோபர் 4-ந்தேதி தொடங்கி, நவம்பர் 21-ந்தேதி வரை இந்த 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில் போட்டிக்கான அட்டவணை வருகிற 1-ந்தேதி (அக்டோபர்) ஐசிசி வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் நட்சத்திர வீரரான விராட் கோலி, இந்த உலக கோப்பைதான் தன்னுடைய கடைசி உலக கோப்பை தொடர் எனத் தெரிவித்துள்ளார். இதனால் இந்தத் தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த உலக கோப்பையில் 14 அணிகள் பங்கேற்கின்றன. விளையாட்டில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தவும், அர்த்தமுள்ள மற்றும் சரியான போட்டியாகவும் இருக்கும் வகையில் ஐ.சி.சி. சில மாற்றங்களை செய்துள்ளது.
அதன்படி ஐ.சி.சி. 50 ஓவர் உலக கோப்பையில் விளையாட தகுதி பெறும் 14 அணிகளில், கடைசி 3 அணிகள் ரவுண்டு 1-ல் விளையாடும். ரவுண்டு-ராபின் சூப்பர் சீரிஸ் என்ற அடிப்படையில் ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். இதில் முதல் இடம் பிடிக்கும் அணி, ரவுண்டு-2க்கு முன்னேறும்.
ரவுண்டு-2ல் 11 அணிகள் மற்றும் ரவுண்டு 1-ல் முதல் இடம் பிடித்த அணி உள்பட 12 அணிகள் பலப்பரீட்சை நடத்தும். 12 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படும். இதுவும் ரவுண்டு-ராபின் முறைதான். இரண்டு பிரிவுகளில் இருந்தும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும். மற்ற 6 அணிகளில் எந்த அணி முதலிடத்தில் உள்ளதோ, அந்த அணி 7-வது அணியாக அடுத்த சுற்றுக்கு முன்னேறும். அதனடிப்படையில் அடுத்து ரவுண்டு 3 என்று அழைக்கப்படும் சூப்பர் 7 சுற்று நடைபெறும்.
இந்த சுற்றில் 7 அணிகளும் ரவுண்ட்-ராபின் முறையில் விளையாடும். நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அரையிறுதில் முதல் இடம்- நான்காவது இடம், 2-வது இடம்- 3-வது இடம் பிடித்த அணிகள் பலப்பரீட்சை நடத்தும். அதன்பின் இறுதிப் போட்டி நடைபெறும்.