ரஞ்சி டிராபி போட்டியில் சத்தீஸ்கர் அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐதராபாத் அணி திரில் வெற்றி பெற்றது.
செகந்தராபாத்தில் நடைபெற்ற ரஞ்சி டிராபி போட்டியில் சத்தீஸ்கர்-ஐதராபாத் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற சத்தீஸ்கர் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த சத்தீஸ்கர் முதல் இன்னிங்சில் 284 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் அனூஜ் திவாரி 72 ரன்னும், விகல்ப் திவாரி 69 ரன்னும் எடுத்தனர்.
ஐதராபாத் சார்பில் சமா மிலிந்த், ரக்ஷன் ரெட்டி தலா 3 விக்கெட்டும், அனிகேத் ரெட்டி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய ஐதராபாத் முதல் இன்னிங்சில் 280 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ராகுல் ராதேஷ் 72 ரன்னில் ஆட்டமிழந்தார். 9வது விக்கெட்டுக்கு இணைந்த தனய் தியாகராஜன் - அனிகேத் ரெட்டி ஜோடி 50 ரன்கள் சேர்த்தது.
4 ரன்கள் முன்னிலை பெற்ற சத்தீஸ்கர் 2வது இன்னிங்சில் 254 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மயங்க் வர்மா 81 ரன்னும், சஞ்சித் தேசாய் 51 ரன்னும் எடுத்தனர்.
10-வது விக்கெட்டுக்கு இணைந்த தர்மேந்திரசின் ஜடேஜா-தேவ் ஆதித்யா சிங் ஜோடி 55 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து, 259 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அபிராத் ரெட்டி 68 ரன்னும், வருண் கவுட் 55 ரன்னும் எடுத்தனர்.
ஒரு கட்டத்தில் 9 விக்கெட்டுக்கு 220 ரன்கள் எடுத்து திணறியது. ஒரு விக்கெட்டை வீழ்த்தி வெற்றி பெறலாம் என நினைத்த சத்தீஸ்கர் அணிக்கு 10-வது விக்கெட்டுக்கு இணைந்த அனிகேத் ரெட்டி- ரக்ஷன் ரெட்டி ஜோடி பொறுமையுடன் ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.
இறுதியில், ஐதராபாத் அணி 79.4 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 259 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது.
அனிகேத் ரெட்டி முதல் இன்னிங்சில் 32 ரன், 2 விக்கெட்டும், 2வது இன்னிங்சில் 39 ரன், 3 விக்கெட்டும் எடுத்து ஆட்ட நாயகன் விருது பெற்றார்.