சிட்னி:
2026-27 ஆம் ஆண்டிற்கான ஆஸ்திரேலிய தேசிய கிரிக்கெட் வீரர்களின் புதிய ஒப்பந்தப் பட்டியலை கிரிக்கெட் ஆஸ்திரேலியா (CA) இன்று வெளியிட்டது. இதில் அதிரடி ஆட்டக்காரர் கிளென் மேக்ஸ்வெல் மற்றும் இளம் வீரர் சாம் கோன்ஸ்டாஸ் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம், டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடும் வீரர்களுக்கு முக்கியத்துவம் அளித்து, 21 வீரர்கள் கொண்ட பட்டியலை இன்று அறிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும் காலங்களில் அதிகப்படியான டெஸ்ட் போட்டிகள் (15 டெஸ்ட் போட்டிகள்) திட்டமிடப்பட்டுள்ளதால், டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தும் வீரர்களுக்கு இந்த ஒப்பந்தத்தில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற மேக்ஸ்வெல், தற்போது டெஸ்ட் போட்டிகளுக்கான திட்டத்தில் இல்லாததால் ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மேக்ஸ்வெல் கடைசியாக 2017-ல் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடினார். பின்னர் அவர் டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் இடம்பெறவில்லை.
மேக்ஸ்வெல் நீக்கப்பட்டது அணி நிர்வாகத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க முடிவுகளில் ஒன்றாகும். 37 வயதான அவர் கடந்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். மேலும் 2017-ம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை. இதனால், நீண்ட வடிவப் போட்டிகளில் அவரது இடம் படிப்படியாகக் குறைந்துவிட்டது. ஒப்பந்தப் பட்டியலில் அவர் இல்லாதது, ஆஸ்திரேலியா அணியில் இனி அவர் இடம்பெற மாட்டார் என்பதையே காட்டுகிறது.
அவருக்கு டி20 போட்டிகளில் வாய்ப்பு கிடைத்தாலும், அங்கும் அவரது நிலை சரியாக இல்லை. ஆஸ்திரேலியாவின் 2026 டி20 உலகக் கோப்பை போட்டியில் மேக்ஸ்வெல் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
இவரை தொடர்ந்து கடந்த சீசனில் ஒப்பந்தம் பெற்றிருந்த 20 வயதான சாம் கோன்ஸ்டாஸ், சமீபத்திய டெஸ்ட் போட்டிகளில் ஃபார்ம் அவுட் ஆனதால் தனது இடத்தை இழந்துள்ளார். அவருக்குப் பதிலாக ஜேக் வெதரால்ட் தொடக்க வீரராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து உஸ்மான் கவாஜா பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
ஆஷஸ் தொடரில் அசத்திய வேகப்பந்து வீச்சாளர் பிரெண்டன் டோகெட் முதல்முறையாக மத்திய ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளார். மேலும், மைக்கேல் நேசர் மற்றும் டாட் மர்பி ஆகியோர் மீண்டும் ஒப்பந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
2026-27 ஒப்பந்தம் பெற்ற 21 வீரர்கள்:-
பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், டிராவிஸ் ஹெட், மார்னஸ் லபுஷேன், ஜோஷ் ஹேசில்வுட், நாதன் லயன், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், மிட்செல் மார்ஷ், ஆடம் ஜம்பா, ஸ்காட் போலண்ட், பிரெண்டன் டோகெட், சேவியர் பார்ட்லெட், நாதன் எல்லிஸ், ஜோஷ் இங்கிலிஸ், மேத்யூ குன்னெமன், டாட் மர்பி, மைக்கேல் நேசர், ஜேக் வெதரால்ட், பியூ வெப்ஸ்டர்.
அடுத்த 12 மாதங்களில் ஆஸ்திரேலிய அணி வங்கதேசம், நியூசிலாந்து மற்றும் இந்தியாவிற்கு எதிரான முக்கியமான டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.